/* */

கட்சியினர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?

CM Stalin -தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அவர் மிகுந்த பக்குவம் அடைந்துவிட்டதை அனைவருக்கும் உணர்த்தியது

HIGHLIGHTS

கட்சியினர் மீது   முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?
X

சென்னை தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.

CM Stalin -தி.மு.க.,வின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கட்சித்தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று தனது பேச்சில் கோடிட்டு காட்டினார். அவரது நிதானமான பேச்சும், அவர் பயன்படுத்திய ஆழமான சொற்களும், முதுபெரும் மறைந்த திராவிடத் தலைவரான கலைஞர் கருணாநிதியை நினைவு படுத்தும் வகையிலேயே இருந்தது.

அரசியலில் பல தோல்விகளைச் சந்தித்து பலரின் ஏளனப் பேச்சுகளுக்கும் ஆளாகி, தமிழக முதல்வராகவும், தற்போது இரண்டாவது முறையாக தி.மு.க., தலைவராகவும் தேர்வாகியுள்ளார் ஸ்டாலின். இத்தனை ஆண்டுகால தோல்விகளில் கிடைத்த அனுபவம், அமைதி, மனதுக்குள் இருக்கும் போர்க்குணம், மற்றவர்களை அணுகும் தன்மை அவரிடம் மெல்ல மெல்ல ஊடுருவியிருப்பது, அவரது பேச்சில் தனித்துவமாக பிரதிபலித்தது. தமிழர்களின் சுயமரியாதை, தமிழகத்தின் நலனை காக்கின்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பேசிய ஸ்டாலின், தனக்கு முன்னால் இருக்கும் மாபெரும் கடமையை உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள் என்று அவர் கூறியதில் இருந்தே அதற்கான புரிதல் அவருக்கு இருப்பதை உணர முடிகிறது.

திமுக அமைச்சர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், அதுபற்றி பேசிய ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர், ஒன்றன் பின் ஒன்றாக பிரச்னைகளை உருவாக்கி தனக்கு தூக்கமில்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசினார்.

மேலும், உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது, மிக மிக எச்சரிகையாக பேசுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வராக, திமுக தலைவராக அவரிடம் முன் இருக்கும் அதிகாரங்கள் ஏராளம். திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தோரணையிலும், வெற்றிக்களிப்பிலும் அவர் பேசியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு பேசவில்லை. மிகவும் முதிர்ச்சியுடன் தனது கருத்தை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிரடி நடவடிக்கை எடுத்தால் அதிரடியாக பேசினால், நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்கு சென்று விடுவர். அந்த, அச்சத்தில் ஸ்டாலின் இதுபோன்று பேசுவதாக சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஸ்டாலினால் ஆளுமையான தலைவராக இருக்க முடியவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இதற்கு முன்பும் கூட பலமுறை தனது வருத்தத்தை அறிக்கை வாயிலாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை அழைத்து நேரிலும் அவர் பேசியிருக்கக் கூடும். ஆனாலும், வெளிப்படையாக தனக்கு இருக்கும் வேதனையை பகிரங்கமாக பொதுவெளியில் பேசியுள்ளார். ஊடகங்களின் கேமிராக்களும், சமூக வலைதளங்களும் தன்னை கவனித்துக் கொண்டிருக்கும் என்பது தெரிந்தும் தனது வருத்தத்தை அவர் தெரிவித்துள்ளார். உண்மையில், இது தி.மு.க., அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும். தாங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவரை தங்களது நடவடிக்கைகள் தூங்க விடாமல் செய்கிறது என்றால் உண்மையான திமுக தொண்டன் அந்த இடத்தில் கூனிக்குறுகிதான் இருக்க வேண்டும்.

ஸ்டாலினை பொறுத்தவரை அவரது நடவடிக்கைகளும், பேச்சும் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டதையே காட்டுகிறது. கலைஞர் கருணாநிதி பேசாத பேச்சையா, ஆ.ராசா பேசியிருப்பார். அதில் ஒரு சதவீதம் கூட பேசியிருக்க மாட்டார். ஆனால், ஆ.ராசா பேசியது ஆழமான கருத்துகள் என்றாலும் அது சர்ச்சையாகிறது என்றால் அதற்கு சமூக வலைதளங்களின் எழுச்சியும் தாக்கமுமே காரணம். சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு நன்மையானதோ, அதே அளவுக்கு தீமையானதும் கூட . குறிப்பிட்ட ஒரு கருத்தை அது கெட்டதோ நல்லதோ உடனடியாக குறிப்பிட்ட நபர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை அதற்கு உண்டு. இதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ள ஸ்டாலின், அதற்கு ஏற்றவாறு முதிர்ச்சி பெற்றுள்ளார். இதே முதிர்ச்சியை தனது கட்சிக்காரர்களும் பெற்றாக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருக்கிறது. இந்த விஷயம் தி.மு.க வினருக்கு புரியுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 11 Oct 2022 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்