/* */

சவூதியும் - ஈரானும் சமரசம் செய்ய காரணம் என்ன ?

பல ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த சவூதியும், ஈரானும் இன்று நட்பு நாடுகளாக மாறி தங்கள் துாதரகத்தை திறந்துள்ளன

HIGHLIGHTS

சவூதியும் - ஈரானும் சமரசம் செய்ய காரணம் என்ன ?
X

சவூதியும், ஈரானும் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் தங்களது பகையினை மறந்து நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன. இடது ஓரம் சவூதி, வலது ஓரம் ஈரான், நடுவில் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள்.

கொரோனாவுக்கு முன்பே உலக பொருளாதாரம் லேசாக ஆட தொடங்கியிருந்தது, அமெரிக்க சீன வாணிப யுத்தம் வழக்கமான பொருளாதார மந்த நிலை என உலக பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. கொரோனா காலம் அதனை இன்னும் மோசமாக்கியது. இக்காலகட்டத்தில் போர் தொடங்கினால் நிச்சயம் உலக நாடுகள் தலையிடாது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரமாயிரம் சிக்கல்கள் என்பதை சரியாக காலத்தை கணித்துத்தான் போர் தொடங்கினார் புட்டீன். அவ்வகையில் அவர் போட்ட கணக்கும் சரி. அவரின் ஆயுதங்கள் கைகொடுத்திருந்தால் அவர் ராணுவ வியூகம் கை கொடுத்திருந்தால் அவரின் திட்டம் முழுக்க சரியாக இருந்திருக்கும். ஆனால் இரண்டுமே சொதப்பியதில் போர் நீண்டது.

புட்டீனின் ராணுவ ஆயுதம் சொதப்பினாலும் சில மிரட்டல்கள் சரியாக கொடுத்தன. அது ஐரோப்பாவுக்கு ரஷ்ய எண்ணெய் செல்லாவிட்டால் என்னாகும் என்பது தான். அதுவரை சல்லி விலையில் எண்ணெய் வாங்கிய ஐரோப்பிய நாடுகள் இதனால் தடுமாறின. அமெரிக்க கனடிய அராபிய எண்ணெய் வந்தாலும் அவற்றின் விலை மிக மிக அதிகம். ஐரோப்பா இதனால் கடுமையாக பாதிக்கபட்டு பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் போராட்டம் பெரிதாகி வெடித்துள்ளது

இது இனி பிரிட்டனிலும் பரவலாம். இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என அச்சம் எழுந்துள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படி பாதிக்கபட்டுள்ளது. இன்னொரு பக்கம் தன் எண்ணெய் மற்றும் ஆயுத ஏற்றுமதி மூலம் தன் பொருளா தாரத்தை உயர்த்தலாம் எனும் அமெரிக்க கனவும் சரியாக பலிக்கவில்லை.

அமெரிக்காவிலும் பொருட்கள் விலையேற்றம் வங்கிகள் சரிவு என நாடு குழப்பத்தில் தத்தளிக்கின்றது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மக்கள் ஒருவித அச்சத்துக்குள்ளாகி வருகின்றார்கள். ரஷ்யா உக்ரைன் போரில் தங்கள் நாடு தலையிடு வதால் அது மூன்றாம் பெரும் யுத்தமாக வெடிக்கலாம் என பல நாட்டு மக்கள் அஞ்சுவதையும் உணர முடிகின்றது. காரணம் ரஷ்யாவின் பலம் அப்படி. உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற முடியாமல் அல்லது பெற்ற வெற்றியினை தக்க வைக்க முடியாமல் திணறலாம். ஆனால் ரஷ்யாவினை முழுக்க வெல்வதோ, ரஷ்யாவுக்குள் இன்னொரு நாடு நுழைவதோ நினைத்து பார்க்க முடியாத விஷயம்.

காரணம் அவர்களின் பல்லாயிரம் அணுகுண்டு, அசைக்க முடியாத செயற்கை கோள் வான்வெளி பலம், இன்னும் கடலடி நீர்மூழ்கி பலம் என அவர்களின் இனனொரு பக்கம் அசாத்தியமானது. ரஷ்யாவிடம் அமெரிக்காவிடம் இருப்பது போன்ற பிரமாண்ட விமானதாங்கி கப்பல்கள் இல்லை, காரணம் உலகை ஆளும் ஆசை அவர்களுக்கு இல்லை.

ஆனால் நீர்மூழ்கி பலத்தில் அமெரிக்காவினை விட ரஷ்யா பன்டங்கு பெரிது, எந்த நாட்டையும் எந்த நிமிடமும் தாக்கும் மிகப் பெரிய நீர்மூழ்கி பலம் அவர்களுடையது. இதனார் ரஷ்யாவுக்குள் புகுந்து ரஷ்யாவினை அடக்குவது முடியாது. உக்ரைனில் அது யுத்தம் நடத்தி கொண்டேதான் இருக்கும் . உக்ரைனுக்குள் ரஷ்யா புகுந்து விடாமல் தடுக்கலாமே தவிர ரஷ்யாவினை முழுக்க அடக்குவது சிரமம்.

இதனால் அமெரிக்காவுக்கு ஐரோப்பாவில் பெரும் எதிர்ப்பு கிளம்புகின்றது. இந்த இடத்தில் உள்ளே புகுந்து ஸ்கோர் செய்கின்றார் டிரம்ப். டிரம்ப் வந்து அதிரடியாக சாடுகின்றார், "எனக்கு ரஷ்யாவுடன் போர் புரிய தெரியாதா? நான் இருந்தவரை புட்டீன் அமைதியாகத்தானே இருந்தார், நான் அந்த அளவு சரியாக நாட்டை காத்தேன். இந்த பிடனால் என்னாயிற்று, எல்லா இடமும் குழப்பம். இதோ அரேபியாவும் அமெரிக்காவின் கையினை விட்டு அகன்று சீனா கைக்கு போகின்றது என சுட்டி காட்டுகின்றார்.

ஆம், நடந்த விஷயம் அமெரிக்காவுக்கு மடடுமல்ல உலகுக்கே அதிர்ச்சி. வளைகுடா எனும் எண்ணெய் செல்வ பிராந்தியத்தில் இதுகாலம் அமெரிக்கா அல்லது ரஷ்யா என இரு நாடுகளே ஆதிக்கம் செலுத்தின. ஏகப்பட்ட எண்ணெய் பணம் அது கொடுக்கும் வியாபாரம். அந்த பணத்தின் முதலீடு என அமெரிக்காவும் ரஷ்யாவும் அரபு உலகில் சில பிடிகளை வைத்திருந்தன. எல்லா சிக்கலுக்கும் இவர்களில் ஒருவர் தான் வருவார்கள். இஸ்ரேல் சவுதி என்றால் அமெரிக்கா வரும். சிரியா ஈரான் என்றால் ரஷ்யா வரும் இது தான் இதுகாலமும் நடந்தது.

ஆனால் சமீப காலமாக அங்கு கால்பதிக்கும் சீனா, பகை நாடுகளான சவுதியும் ஈரானும் அமைதிக்கு திரும்ப பஞ்சாயத்து செய்து இருநாட்டு தூதரங்களையும் அந்தந்த நாடுகளில் திறக்க முடிவெடுக்க வைத்திருக்கின்றது. அதாவது சவுதியும் ஈரானும் இனி நண்பர்கள். இந்த பஞ்சாயத்து பீஜிங்கில் நடந்திருக்கின்றது, வழக்கமக இந்த நாட்டாமை தனத்தை மாஸ்கோ அல்லது நியூயார்க் தான் நடத்தும். அதனை பீஜிங் செய்து உலகின் சக்தி வாய்ந்த நாடாக சீனா தன்னை காட்டி கொண்டது. சவுதிக்கு இதில் விருப்பமில்லைதான், ஆனால் டிரம்ப் இருந்த வரை அரேபியனினை சரியாக கையாண்டார், பிடன் இந்த அரேபிய அரசியலை புறக்கணித்தார்.

சவுதியில் இருந்த பேட்ரியாட் முதல் எல்லா அமெரிக்க ஆயுதங்களையும் உக்ரைனுக்கு கொண்டு சென்றார். இன்னும் பலவகையில் சவுதியினை கைவிட, அந்நாடு இந்த அதிர்ச்சியினை கொடுத்து விட்டது. உலக அரங்கிலும் மேற்குலகிலும் இது பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தி, அமெரிக்காவினை கொந்தளிக்க வைத்திருக்கின்றது. உக்ரைனில் இந்தியா தலையிடலாம் எனும் நிலையில் இப்படி ஒரு பஞ்சாயத்து செய்து உலகில் அடுத்த மாற்று தானே என காட்டுகின்றது சீனா. அமெரிக்காவும் இதர நாடுகளும் இதனை பார்த்து முறைத்துகொண்டிருக்க, சீன குளோபல்டைம்ஸ் தன் "சீனத்து பரணியினை" ஆரம்பித்து விட்டது.

"எழுந்தது பார் சீன எழுச்சி " என பல பக்கங்களுக்கு பரணி பாடி, இனி வானம் நிலா சூரியன் எல்லாம் சீனாவுக்கே என சீனநானூறு பாடிமுடித்து அந்த அதிர்ச்சி செய்தியினை சொன்னது. "எங்கள் நாடு அமைதி விரும்பி நாடு, இன்னொரு நாட்டின் ஒரு பிடி மண்ணுக்கும் ஆசைபடாத மிக மிக கண்ணியமான அன்பான நாடு. உலகுக்கே அன்பும், அமைதியும் எங்களிடமிருந்துதான் ஏற்றுமதியாகின்றன. அப்படிபட்ட மகா அன்பான நாடு எங்கள் சீனா. வலிய வந்த யுத்தத்தை யெல்லாம் சீனா தவிர்த்து அன்பு காட்டுகின்றது. பல நாடுகள் எங்களை போருக்கு இழுத்து தாக்கிய பொழுதும் சீனா தாயுள்ளத்தோடு அமைதி காத்தது. உலகில் அன்பும் சகோதரத்துவமும் காக்க இனி சீனாவினை விட்டால் யாருமில்லை அல்லவா? இதனால் தன் நிலை உணர்ந்து தன்னை போல அடுத்தவர்களும் நிம்மதியாக வாழவேண்டும் என சவுதி அரேபியாவினையும், ஈரானையும் நல்வழிபடுத்தியிருக்கின்றது.

இந்த அமைதியின் தாய் நாடு. இந்த மாபெரும் அமைதி முயற்சியினை எட்டிய எங்கள் தலைவர் ஜின் பெங்கிற்கு நோபல் பரிசு முதல் ஆஸ்கர், புக்கர் என எல்லா விருதையும் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த விருதுக்கு மரியாதை இல்லை. அமைதியே எங்கள் கொள்கை, அன்பே எங்கள் லட்சியம், சகோதரத்துவமே எங்கள் வழி" என சொல்லி விட்டது. பிடனின் குழப்பம் பல அதிர்ச்சிகளை கொடுத்து கொண்டிருக்கின்றது. இனி என்னாகும் என்பது இனிதான் தெரியும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குழப்பங்கள் ஆரம்பிக்கின்றன.

புட்டீன் எதிர்பார்த்தது ஓரளவில் இதனைத் தான் உலக அரங்கில் இப்போதைக்கு நிலைத்த பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகள் மிக சில, அந்த வரிசையில் இந்தியா முதலிடத்தில் அதாவது தொடர்ந்து வளரும் மிகபெரிய வாய்ப்புகளோடு நிற்கின்றது. வேறு எந்தநாட்டு நிலையும் சொல்லும்படி இல்லை. சீனாவின் எதிர்கால வளர்ச்சி கணிக்க முடியாதது எனும் வகையில் இந்தியாவின் நிலை மேலானது. எனினும் அரேபிய பஞ்சாயத்தை தொடர்ந்து கடும் மகிழ்ச்சியில் இருக்கும் சீனத்து குளோபல் டைம்ஸ் தொடர்ந்து, "சீன பூக்கள் உலகமெங்கும் மலரவே" என அதன் போக்கில் பாடிக் கொண்டிருக்கின்றது.

Updated On: 15 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  2. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  3. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  6. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  7. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!