/* */

சிறுத்தை பலியான விவகாரம்: ரவீந்திரநாத் எம்.பி., விளக்கம்

தனது தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை பலியான சம்பவத்தில் தேனி வனத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையில் எம்.பி., ரவீந்திரநாத் ஆஜரானார்.

HIGHLIGHTS

சிறுத்தை பலியான விவகாரம்: ரவீந்திரநாத் எம்.பி., விளக்கம்
X

தேனி வனத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையில் ரவீந்திரநாத் எம்.பி., ஆஜர் ஆனார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடக்குமலை காப்புக்காடு பகுதியில் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் எம்.பி., உட்பட 3 பேருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்த தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமனாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், தோட்ட மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோரை வனத்துறை கைது செய்தது.

இதனைத்தொடர்ந்து ஆட்டுக்கிடை அமைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி., மற்றும் லட்சுமிபுரத்தை சேர்ந்த தியாகராஜன், நிலக்கோட்டை ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்த காளீஸ்வரன் ஆகியோருக்கு விளக்கம் அளிக்குமாறு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. மற்ற இருவரும் கடந்த அக்டோபர் 22ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தனர். ரவீந்திரநாத் எம்.பி., வேறு வேலை இருந்ததால் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்மனை ஏற்று, ரவீந்திரநாத் எம்.பி., நேரில் ஆஜரானார். சமதர்மபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மற்றும் வனத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். வனத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரவீந்திரநாத் எம்.பி., பதிலளித்தார். அவரது பதில்களை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் விசாரணை நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ரவீந்திரநாத் எம்.பி்., கூறுகையில், 'வழக்கமாக வனவிலங்குகள் இறந்தால் அது பற்றி விசாரணை நடத்துவது வனத்துறையினரின் வழக்கம். எனவே என்னிடமும் இது போன்று விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு நான் உரிய பதில் அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் நான் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. போடி மலைப்பகுதி, கைலாசநாதர் கோயில் மலைப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம், காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. தேவாரம் வனப்பகுதியில் ஒற்றை கொம்பு யானையின் அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. கூடலுார், மேகமலை வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வருஷநாடு, வெள்ளிமலை வனப்பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களை சேர்ந்த விவசாயிகள் மிகவும் கவனமுடன் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையின்றி இரவில் தோட்டத்து பகுதிகளில் தங்க வேண்டாம். வனவிலங்குகளின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேனி மாவட்ட வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 13 Nov 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!