/* */

9 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அமித்ஷாவின் அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அதனை உறுதி செய்துள்ளார்.

HIGHLIGHTS

9 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக
X

பைல் படம்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி இருவருக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களால் கூட்டணிக்குள் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரது வியூகம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

அதிமுக, பாஜக இடையே சமீப காலமாக கருத்து மோதல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததில் இருந்து மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் ஆகிய இருவரையும் இணைக்க அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அதிமுகவினரை இணைப்பதற்கு அண்ணாமலை யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையை கடுமையாக குற்றம்சாட்டிவிட்டு பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து அண்ணாமலையின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்பட்டது. அதில், குறிப்பாக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்" என அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இனியும் அதிமுகவை நம்பி இருந்தால் பாஜகவை கரைசேர்க்க முடியாது என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்தார். இதற்காக தொடர்ந்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத அரசியலை செய்ய வேண்டும், ஒரு தூய்மையான அரசியலை செய்ய வேண்டும், கூண்டில் இருக்கக்கூடிய கிளி பறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி கொண்டே வந்தார். இதற்கு அதிமுக தரப்பிலும் அது அவருடைய சொந்த கருத்து என்றும் அவருடைய கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு இப்படி கூறி வருகிறார் என கூறினர். தனித்துப் போட்டியிட்டால் தான் பாஜகவை வளர்க்க முடியும் எனவும் அப்படியே எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவது கடினம் தான் என பாஜக டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது.

பாஜகவின் டெல்லி மேலிடம் அண்ணாமலையின் கோரிக்கையை மறுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புவதாக தமிழக பாஜக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜக டெல்லி மேலிடம் சொன்ன கருத்தை ஏற்காமல் அண்ணாமலை தொடர்ந்து தனது நிலைப்பாட்டிற்கு டெல்லியை சம்மதிக்க வைக்கலாம் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார். 2024-ல் தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக இல்லாத பாஜக தலைமையில் கூட்டணி என்ற வியூகத்தை அண்ணாமலை வகுத்துள்ளார். அதில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ், புதிய தமிழகம், தமாகா போன்ற கட்சிகளை ஒன்றிணைக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியை ராமநாதபுரத்தில் போட்டியிட வைக்கவும் அண்ணாமலை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி மூன்றாம் அணி அமைக்கும் போது தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிடும் பட்சத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளன. மேலும் ராமநாதபுரத்தில் 25 சதவீதத்திற்கு மேல் முக்குலத்தோர் வாக்குகள் இருப்பதால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணியில் இருப்பதால் வெற்றிக்கு அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக அண்ணாமலையின் திட்டமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பேசிய அண்ணாமலை, "கூட்டணி மட்டுமே தொடர்கிறது என அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் கூட்டணி இறுதி செய்யவில்லை" என கூறியிருந்தார். மேலும் தேர்தல் தொடர்பாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தமிழகத்தில் தென்சென்னை உட்பட 9 தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது" என கூறினார். எல்.முருகனின் இந்த கருத்து மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நகர்வாக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறார். கூட்டணி இறுதி செய்யவில்லை என்று கூறிய அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். பாஜகவை பொறுத்தவரையில் மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள், மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல" என கூறினார். இந்த கருத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கு கருத்து மோதல்கள் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆடு உறவு, குட்டி பகை என்ற கருத்திற்கு ஏற்ப தற்போது அதிமுகவும், பாஜகவும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நீதிமன்ற தீர்ப்பு சாதகம், பொதுச்செயலாளர் தேர்வு போன்ற செயல்பாடுகளுக்கு பின்னர் பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி உறுதியாக எடுப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

நீதிமன்றங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், இன்னும் தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தான் உள்ளன. இதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்க பாஜகவின் உதவி தேவை என கூறப்படுகிறது. இதற்காகவே எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி என உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது. கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

கர்நாடகாவில் குறிபிட்ட சில பகுதிகளில் அதிமுகவிற்கும் வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையும் ஒரு காரணமாக வைத்து அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது. இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு அதிமுக சார்பாக போட்டியிட ஒரு சில தொகுதிகளை ஈபிஎஸ் பாஜகவிடம் கேட்பதற்கு முடிவு எடுத்துள்ளாராம். அப்படி ஒரு சில தொகுதிகள் ஒதுக்கும் போது இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் நிலை வரும். அப்போது பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்குமாறு பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்க ஈபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷயாம், "எடப்பாடி பழனிசாமியின் எதிரி வரிசையில் ஓபிஎஸ்ஸை கடந்து அந்த இடத்தில் தற்போது அண்ணாமலை வந்து விட்டதாக நான் நினைக்கிறேன். இரண்டு பேரின் சமூகம் ஒன்று என்பதால் அண்ணாமலையின் வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. கொங்கு பகுதியில் நாம் இருக்கிறோம், தென் மாவட்டங்கள் இருக்கக்கூடிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைத்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறலாம் என அண்ணாமலை நினைக்கிறார். அண்ணாமலையின் நிலைப்பாட்டிற்கும் பாஜக டெல்லி மேலிடம் சம்மதம் தெரிவிப்பதற்கும் வாய்ப்புள்ளது" என கூறினார்.

Updated On: 4 April 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!