/* */

இ-சேவை மையங்களை மூடக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சட்டமன்றத்தில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கூறியபடி இ- சேவை மையங்களை வலுப்படுத்தி தடையின்றி சேவைகளை வழங்க வேண்டும்

HIGHLIGHTS

இ-சேவை மையங்களை மூடக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டம் மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் 2 -ஆவது நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம் 1:பெட்ரோல் டீசல் மீதான செஸ் - சிறப்பு கலால் வரியை கைவிட வேண்டும்:

சில நாட்களுக்கு முன்பாக, ஊடகங்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சிறு அளவில் குறைத்ததுடன், மாநிலங்களும் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். கடுமையான விலையேற்றத்தை தாங்க முடியாத வேதனை யில் இருந்த மக்களுக்கு, இந்த அறிவிப்பினால் சற்று ஆறுதல் ஏற்பட்டாலும், இது ஒரு ஏமாற்று நாடகமே என்பதை உணர்ந்துவிட்டார்கள்.

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற 137 நாட்களை தவிர்த்து, கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக விலையை ஏற்றி, 112 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை. டீசல் மீதான வரி ரூ.3 என்ற அளவில் இருந்தது, மோடி ஆட்சிக் காலத்தில் படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.32 ஆகி, பெட்ரோல் விலையோடு சமன் செய்யும் அளவுக்கு உயர்ந்தது.

இப்போது, உயர்த்தியதில் ஒரு சிறு பகுதியை குறைத்துவிட்டு, அதை மக்களின் மீதான கரிசனமாக முன் வைப்பது மோடியின் ஏமாற்று நாடகமே. இதே காலகட்டத்தில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.53க்கும், வாகனங்கள் பயன்படுத்தும் எரிவாயு ஒரு லிட்டரின் விலை ரூ.8 க்கும் உயர்த்தப்பட்டுள் ளதுடன், பெட்ரோல்-டீசல் மொத்த விற்பனையின் விலையும் உயர்ந்துள்ளது.

விலை உயர்வு இருக்காதா?

பெட்ரோல்- டீசல் மீதான வரிகளை உயர்த்தியதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசாங்கம் திரட்டிய நிதி ரூ.26 லட்சம் கோடி ஆகும். ஆனால், இப்போது மேற்கொண்டிருக்கும் விலை குறைப்பினால் ரூ.1 லட்சம் கோடிகள் முதல் ரூ.2 லட்சம் கோடிகள் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். ஆனால் வரும் ஆண்டுகளில் மீண்டும் விலை உயர்த்தப்படாது என்ற எந்த உறுதியையும் ஒன்றிய அரசாங்கம் வழங்கிட வில்லை. பெட்ரோலில் 10 விழுக்காட்டில் எத்தனால் கலக்கப்படுகிறது. பெட்ரோல் விலையை விட எத்தனால் விலை குறைவு. இந்த விலை குறைப்பை நுகர்வோருக்கு குறைத்துக் கொடுக்காமல் பெட்ரோலிய நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு அனுமதித்து வருகிறது.ஆனால், மேற்சொன்ன உண்மைகளை மறைத்து, தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்பும் முயற்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை இறங்கியிருக்கிறார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் மீது உண்மையிலேயே மோடி அரசுக்கு அக்கறை இருக்குமானால், ஒன்றிய அரசுக்கு மட்டுமான சிறப்பு கலால் வரி, செஸ் மற்றும் சர்சார்ஜ் ஆகிய வருவாய் இனங்களில், மத்திய அரசு செய்த அநியாய உயர்வு அனைத்தையும் முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலைக் கொள்ளையை கைவிட வேண்டும். பொதுப் போக்குவரத்திற்கான செலவுகளை உயர்த்தக்கூடிய விலைக் கொள்கையையும் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :அறிவிக்கப்படாத மின்வெட்டும், தொழில் பாதிப்பும்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் தொழில்கள் முடங்கிப்போய் இருந்தது. கடந்த ஓராண்டு காலமாக தொழில்கள் செயல்பட துவங்கியுள்ள நிலையில் பெருநகரங்களை தவிர்த்து இதர இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழில்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நடைபெறும் காலமானதால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மின் தேவையை விட மின் உற்பத்தி குறைவாக இருப்பதாலேயே மின்வெட்டு ஏற்படுகிறது.அதிமுக ஆட்சி காலத்தில் மின்வாரியத்திற்கு 1,56,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்போதைய அதிமுக அரசு சரியான திட்டமிடல் இல்லாததும், புதிய மின் திட்டங்களை துவக்க எந்த முயற்சியும் எடுக்காததுமாகும்.

தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தியை திட்டமிட வேண்டிய மின்வாரிய நிர்வாகம் அதில் கவனம் செலுத்தாமல் பயன்பாடு அதிகம் உள்ள நேரங்களில் (Peak Hours) நமது அனல்மின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்தி விட்டு தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது கைவிடப்பட வேண்டும். தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான உற்பத்தி நிலையங்களில் முழு வீச்சில் மின் உற்பத்தி துவக்குவதோடு நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், புதிய மின் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் உடனே துவங்க வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், மின்சாரத்தை கூடுதல் விலைக்கு தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 :காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்:

காவிரியில் அபரிதமான மழைப் பொழிவினால் பல நேரங்களில் காவிரி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பயன்படும் வகையில் துவங்கப்பட்டுள்ள காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே திட்டமிட்டப் பாதையில் எந்த மாற்றமும் இல்லாமல் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4: காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்:

காவிரி டெல்டா பாசனத்திறகாக மேட்டூர் அணை மே 24-ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கான இயல்பான பரப்பளவை தாண்டி கூடுதலாக இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரிடும் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடன் முடிக்க வேண்டும். தேவையான அளவு விதை, ரசாயன உரம், பயிர்க்கடன் உட்பட விவசாயிகளுக்கு தடையில்லாமல் கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது.

தீர்மானம் 5 :இ-சேவை மையங்களை தொடர்ந்து இயக்க வேண்டும்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் கீழ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ- சேவை மையங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அந்த மையங்களில், பொது மக்களுக்கு வருவாய் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு - இறப்பு சான்றுகள், சிட்டா அடங்கல் என நூற்றுக்கும் மேற்பட்ட மின்னணு சேவைகள் தரப்படுகின்றன. இந்தநிலையில், இ- சேவை மையங்களை இணைப்பது என்ற பெயரில் 96 இ-சேவை மையங்களை மூட உள்ளதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இ-சேவை மையங்களில் ஏராளமான இளம் தொழிலாளர்கள் மாதம் ரூ.7,500 மட்டுமே ஊதியமாகப் பெற்று பணியாற்று கிறார்கள். அவர்களிடம், வாய்மொழி உத்தரவு மூலம் பொருட்களை திருப்பி வழங்குமாறு நிர்பந்தப்படுத்தி யுள்ளனர். அவர்களின் Login ID மற்றும் Password முடக்கப்பட்டு, அவர்களை வேலையில் இருந்தும் நீக்கம் செய்துள்ளனர்.

இந்த 96 இ- சேவை மையங்களை மூடுவது என்ற முடிவை அரசு திரும்ப பெற்று தொடர்ந்து அவற்றை இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கூடுதலான இ-சேவை மையங்களை திறக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் தமிழ்நாடு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டபடி இ- சேவை மையங்களை வலுப்படுத்தி, சேவைகளைத் தடையில்லாமல் வழங்கிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Updated On: 27 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  8. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  10. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!