/* */

கூடலூர்: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீலகிரி கலெக்டர் ஆய்வு

கூடலூர் ஊராட்சியில், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட மேங்கோ ரேஞ்ச், உப்பட்டி ஹட்டி, மேஸ்திரி குன்னு மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சோலாடி, அத்திச்சால் மற்றும் வடச்சேரி ஆகிய நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் கூறுகையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள் 14 நாட்கள் வெளியில் வரக்கூடாது. வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் கட்டாயம் செல்லக்கூடாது. இதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் இருப்பிடத்திற்கே கிடைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் முதியோர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அத்திச்சால் நோய்கட்டுப்பாட்டு பகுதியினை பார்வையிட்டு, 35 பழங்குடியின குடும்பங்களுக்கு காய்கறிகளை, கலெக்டர் வழங்கினார். ஆய்வின் போது, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர், ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் (பொ) பாஸ்கரன், கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், பந்தலூர் வட்டாட்சியர் தினேஷ்குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்குமாரமங்கலம், ஜெய்சங்கர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 10 Jun 2021 1:47 PM GMT

Related News