/* */

நாமக்கல்: பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்த 15,760 விவசாயிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் 15,760 விவசாயிகள் இணைந்துள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.

HIGHLIGHTS

நாமக்கல்: பயிர்  இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்த 15,760 விவசாயிகள்
X

நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்ட விழிப்புணர்வு முகாமில் ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் 15,760 விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்துள்ளதாக, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏளூரில் பயிர் விவசாயிகளுக்கான, இன்சூரன்ஸ் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில், 15,760 விவசாயிகள், 6,163.02 ஹெக்டர் பரப்பிலன பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத விதமாக சேதம் ஏற்படும் போது விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி மகசூல் கிடைக்காத நிலையில் நஷ்டத்தை ஈடு செய்திடும் வகையில் உரிய இழப்பீடும் பெறலாம். இதற்காக விவசாயிகள் பிரிமியம் செலுத்தி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்தால் தான், நமக்கு தேவையான உணவுப் விளைபொருட்கள் தொடர்ந்து கிடைக்கும். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை காத்திடும் வகையிலும், தொடர்ந்து விவசாயம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளின் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத அளவிற்கு, கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக விவசாயிகளுக்கு கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். ஒவ்வொரு வட்டாரத்திலும் விவசாயிகள் வேளாண் திட்டங்களை அறிந்து கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளவும், வேளாண் விரிவாக்கம் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவுதம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மனோகரன்,வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குனர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Nov 2022 11:15 AM GMT

Related News