/* */

எதிர்கட்சிகளின் கூட்டணி ‘கலங்க’ என்ன காரணம்?

எதிர்கட்சிகள் ஒன்றிணைய அடித்தளமிட்டவரான நிதிஸ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை தனித்து முடிவெடுத்தார்.

HIGHLIGHTS

எதிர்கட்சிகளின் கூட்டணி ‘கலங்க’ என்ன காரணம்?
X

ஆனாலும், அந்த முடிவுக்கான சூழல்கள் அங்கு இருந்தன. அதற்கு காங்கிரஸ் பிள்ளையார் சுழி போட்டது ஏன்..? பாஜகவை வீழ்த்துவதில் ஒரு முன் களவீரனாக காங்கிரஸ் இருக்கிறதா..?

ஊசலாட்ட மனநிலை கொண்டவர் தான் நிதிஸ்குமார். ஆயினும், பாஜகவின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு ஒரு மாற்று அவசியம் தேவை என அவர் தான் முதன் முதலாக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க ஆர்வம் காட்டினார். அவர் முயற்சியில் தான் பல மாநில கட்சிகள் இந்த அணியில் சேர்ந்தனர். ஆனால், அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாமலே இருந்தது. வயதிலும், அனுபவத்திலும் இவர் தான் இருப்பதிலேயே மூத்தவர். இதுவரை ஊழல்கறை படியாதவர். எனவே நிதிஸ்குமாரை இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளராக அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், திடீரென்று மல்லிகார்ஜுன கார்க்கேவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், இந்தியா கூட்டணி உருவாக்கம் பெற்ற போது காங்கிரஸுக்கே தலைவராகவில்லை மல்லிகார்ஜுன கார்க்கே. எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவோ, வழி நடத்தவோ பழக்கப்படாதவர் கார்க்கே. அது மட்டுமின்றி, அவரே கூட எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அப்புறப்படுத்தப்படலாம்.

நிதிஸ்குமாருக்கு முக்கியத்துவம் தரப்படாதது குறை என்றாலும், அந்த காரணத்திற்காக அவர் எதிர்கட்சிகள் அணியில் இருந்து விலகுவது அவருக்கு பாஜகவிற்கு மாற்றான ஜனநாயகப் பாதையில் பற்றில்லை. கொள்கை உறுதியில்லை. உண்மையான சேவையில், மக்கள் நலனில் அக்கறையில்லை என்று தான் அர்த்தமாகும். சொந்த சுயலாபத்திற்காக, பதவி பற்றுக்காக அவர் அணி மாறுவது கடைந்தெடுத்த துரோகத்திற்கு சமம்.

வேறெப்போதையும்விட பாஜக விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த தருணத்தில் எதிர்கட்சிகள் கூட்டணி சிதைவது துர்பாக்கியமாகும். வெவ்வேறு தன்மையுள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்ததே ஒரு வெற்றி என மக்கள் கொண்டாடினார்கள். அதுவும் 24 கட்சிகள் சேர்ந்து பாஜகவை எதிர்ப்போம் என ஒன்றுபட முடிந்ததே முதல் கட்ட வெற்றியாக கருதப்பட்டது. அத்துடன் நமக்குள் உள்ள வேற்றுமைகளை களைந்து ஒன்றுபடுவோம் மனம் திறந்து விவாதித்தது ஒரு நம்பிக்கையை தோற்றுவித்தது.

ஆனபோதிலும், இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் அம்சங்கள் தொடர்ந்து பல தரப்பிலும் நடந்து கொண்டே இருந்தது. குறிப்பாக பல அம்சங்களில் பாஜகவைப் போலவே தோற்றம் காட்டி வந்தது காங்கிரஸ். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து ஒன்றிணைவது,

* தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் பொதுசெயல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது,

* மாநிலக் கட்சிகளை அரவணைத்து ஒருங்கிணைப்பது!

என 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பாட்னா கூட்ட முடிவில் மதசார்பற்ற கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்தது அன்றைய தினம் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்தது.

தேசிய அளவில் நாம் பாஜகவிற்கு மாற்றாக கருதும் காங்கிரஸ் பல வகைகளில் இன்னொரு பாஜகவாகவே இருக்கிறது. மத்தியில் அதிகாரக் குவியல், மாநில உரிமைகளை குறைப்பது, விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது.. ஆகியவற்றில் தன் நிலைபாடு என்ன என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்தும் போது அணி சேர்ந்துள்ள மாநில கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். ஆனால், பெங்களுர், மும்பை என அடுத்தடுத்து இந்தியா கூட்டணி சந்திப்புகள் நடைபெற்ற போதிலும், இந்த நம்பிக்கையை இன்று வரை காங்கிரஸ் விதைக்கவில்லை.

சென்ற ஆண்டு (2022) மார்ச்சில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில் குஜராத்தில் ஐந்தாவது முறையாக வெற்றியை பறிகொடுத்தது. கோவாவில் வெற்றி வாய்ப்பிருந்தும் காங்கிரஸ் கோட்டை விட்டது. பஞ்சாப்பில் இருந்த ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்கத் தவறியது. உ.பியிலும், உத்திரகண்டிலும், மணிப்பூரிலும் பாஜக ஆட்சிக்கு எதிர்ப்புகள் இருப்பதை அறிவோம். இருப்பினும் இந்த விரிசலுக்கு என்ன காரணம்? எந்த வகையிலும் தன் தவறுகளை திருத்திக் கொண்டு தன்னை புனருத்தாரணம் செய்து கொள்ள முடியாத கட்சியாகவே காங்கிரஸ் நடந்து கொள்வதால், அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

ஐந்து மாநிலத் தேர்தல் சமீபத்தில் நடந்த போது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கத் தவறியது. குறிப்பாக ‘இந்தியா’ என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகும், அவை மாநில அளவில் தேர்தலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

குறிப்பாக சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் சிறிய கட்சிகள் என்றாலும், இவை காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து நிற்கும்படி காங்கிரசால் புறந்தள்ளப்பட்டதன் காரணமாக பல தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியை பாஜகவிற்கு பரிசளித்தது. சட்டிஸ்கரில் சென்ற முறை 68 இடங்களை பெற்ற காங்கிரஸ் தற்போது அதில் கிட்டத்தட்ட பாதியைத் தான் பெற்றுள்ளது. இங்கும் சி.பி.ஐ, சி.பி.எம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகியவை தனித்துகளம் கண்டன. ராஜஸ்தானில் ஆம் ஆத்மீ, சமாஜ்வாதி மற்றும் இடதுசாரிகள் என இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளை புறந்தள்ளி தோல்வியை அரவணைத்துக் கொண்டது. காங்கிரஸுடமுள்ள பெரியண்ணன் மனோபாவம் இன்னும் மாறவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

ம.பியில், உபியில், குஜராத்தில் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர முடிகிற போது, ராஜஸ்தானிலும், சட்டிஸ்கரிலும் இரண்டாவது முறை கூட காங்கிரசால் ஏன் வெற்றி பெற முடியவில்லை என அந்தக் கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளத் தவறியது. ஆகவே, இவை எல்லாமே பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் பிரதான முக்கியத்துவம் தராத அலட்சிய மன நிலையில் உள்ளதோ… என சந்தேகிக்க வைக்கிறது.

பாஜகவின் அசுர பலத்திற்கு மாற்றான ஜனநாயக செயல்திட்டத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். மாறாக காங்கிரஸ் கட்சியும் ஒரு மென்மையான இந்துத்துவா கட்சியாக இருக்கிறது. இது இரண்டுங்கெட்டான் நிலையாகும். இரண்டுங்கெட்டானாக இருக்கும் ஒரு இயக்கத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும்?

காந்திய, சோசலிச, ஜனநாயக செயல்திட்டத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். அப்போது தான் தற்போது விலகிச் செல்லும் மன நிலையில் உள்ள ஆம் ஆத்மியும், திரிணமுல் காங்கிரசும், தேசிய கட்சியான காங்கிரஸ் மீது நம்பிக்கை வைப்பார்கள். பஞ்சாப்பில் காங்கிரஸை கண்டு ஆம் ஆத்மி அச்சப்படுகிறது. ”தனித்து களம் காண்பேன்” என்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், ”காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர்த்த அணி” என்கிறார். இது வெற்றி வாய்ப்பை தூக்கி பாஜகவிடம் தருவதில் தான் முடியும்.

ஆகவே, சம்பந்தப்பட்ட கட்சிகள் மக்களுக்காக – பொது நன்மைக்காக – ஒன்றிணைகிறோம். நாட்டை பா.ஜ.க.,விடம் இருந்து மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்போது அது நடக்கா விட்டால், நாட்டு நிலைமை பேராபத்தில் சென்று முடியும். இந்தியாவில் மக்களாட்சியே குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும். ‘பாஜகவிடம் அதிகாரம் செல்வதை தடுக்க எதிர்கட்சிகள் திரானியற்று – தங்களுக்குள் சண்டையிட்டு – மக்களை பலிகடாவாக்கி, வெற்றியை துாக்கி பா.ஜ.க.,விடம் கொடுத்தனர்’ என்ற பழி வரலாற்றில் பதிவாகும்.

Updated On: 30 Jan 2024 4:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?