/* */

சின்னம் பிரச்சினை: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கதறி அழுத துரை வைகோ

சின்னம் பிரச்சினை தொடர்பாக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை வைகோ மேடையில் கதறி அழுதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

சின்னம் பிரச்சினை: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கதறி அழுத துரை வைகோ
X

செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், எங்களை புண்படுத்தாதீர்கள் என திருச்சியில் நடந்த திமுக மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ கண் கலங்கிபடியே பேசினார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக- மதிமுக சார்பில் அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசுகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத போதுதான் நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கட்சிக்காரர்கள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டார்கள். இப்போதும் நான் பெரிய வேட்கையோடு ஆசையோடு அரசியலில் இருக்கிறேனா என்றால் கிடையவே கிடையாது. உண்மையாக சொல்கிறேன், மனசை தொட்டு சொல்கிறேன், இப்போதும் தேர்தலில் நிற்கிறேன் என நான் சொல்லவில்லை. வேறு யாரையேனும் நிறுத்துங்கள், நான் பணியாற்றுகிறேன் என்றுதான் சொன்னேன். ஏனென்றால் என் கட்சிக்காகவும் அப்பாவுக்காகவும் 30 ஆண்டுகள் உழைத்து உழைத்து அவர்கள் தேய்ந்துவிட்டார்கள் என அழுதபடியே துரை வைகோ கூறியிருந்தார்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் சின்னம் குறித்து துரை வைகோவை சீண்டினர். இதையடுத்து பேசிய அவர், சின்னமா சின்னமா என கேட்டுவிட்டு, செத்தாலும் எங்கள் சின்னம் பம்பரம் தான். நான் சுயமரியாதைக்காரன். என் அப்பா உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். நாங்கள் உதயசூரியன் சின்னத்தை உயிராக நேசிக்கிறோம், மதிக்கிறோம். திமுகவை உயிராக நேசிக்கிறோம். ஆனால் மதிமுகவில் உள்ள பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இந்த தேர்தலில் மாற்று கட்சி சின்னத்தில் நிற்க முடியாது.

நீங்கள் வேறு வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம். திராவிடர் கழகம் போல் அரசியலை நடத்திவிட்டு செல்கிறோம். திராவிட சக்திகளை அழித்துவிட்டு மதவாத சக்திகளை வேரூன்ற வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்ற உன்னதமாக நோக்கத்தில்தான் நாம் எல்லோரும் சேர்ந்துள்ளோம்.

ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. நாங்கள் சின்ன கட்சிதான். பெரிய சக்தி கிடையாது. நீங்கள் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும் 40 தொகுதிகளிலும் உங்களுக்கு உறுதுணையாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். எங்களை புண்படுத்தாதீர்கள் என துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் மகன் துரை வைகோ, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அது போல் இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கோரியிருந்தது. அதற்கு மதிமுக மறுப்பு தெரிவித்திருந்தது. திருச்சி வேட்பாளராக துரை வைகோவை, அவரது தந்தை அறிமுகப்படுத்திய போது கூட, பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி, இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என வைகோ பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சட்டசபை தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் அவர் சொந்த கட்சியிலிருந்து தனது பதவி, அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணி கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும். அப்போதுதான் அவருக்கு கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட உரிமை உண்டு. அப்படி போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அவர் மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பிவிடலாம். இல்லாவிட்டால் அந்த பதவிக்காலம் முடியும் வரை அவர் நாடாளுமன்றம், சட்டசபை பதிவுகளில் கூட்டணி கட்சியின் எம்பி, எம்எல்ஏவாகவே தொடர்வார்.

உதாரணமாக துரை வைகோவை திருச்சியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். அப்படியென்றால் துரை வைகோ, மதிமுக தலைமை நிலைய செயலாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்து விட்டு பின்னர் திமுகவில் உறுப்பினராக இணைய வேண்டும். அப்போதுதான் அவர் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்த உரிமை உண்டு. அதனால்தான் அன்பில் மகேஷ், துரை வைகோவை புதிய சின்னத்தில் வேண்டாம் உதயசூரியனில் போட்டியிடுங்கள் என மறைமுகமாக சொன்ன போதும் துரை வைகோ, "ஒரு கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சி சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் " என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Updated On: 24 March 2024 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!