/* */

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி.

வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் நம் தமிழ்நாடு முன்னிலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.

கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தியுள்ளார். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை செலவாகக் கருதாமல் கல்விக்கான முதலீடாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனை பள்ளிக்கல்வித் துறையில் உள்ள அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கலைத்திருவிழாவின் மூலம், மாணவர்களிடத்தில் பொதிந்துள்ள பல்வகை ஆற்றலை வெளிக்கொணர்கின்ற சூழல் உருவாகியுள்ளது. "நம்பள்ளி நம்பெருமை" திட்டத்தினால் அரசுப் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இந்திய ஒன்றியத்திலேயே, முதன்முதலாக நம் தமிழ்நாட்டில் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பள்ளிக்கு வருகை கூடியுள்ளதோடு கற்கும் ஆர்வமும் கூடியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதன் மூலம் "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்" என்ற மகாகவியின் கனவு நிறைவேறியிருக்கிறது.

"மணற்கேணித் திட்டம்" - நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுத்து கற்றனைத்தூறும் அறிவைச் சுரந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் மனதிற்கு மகிழ்வூட்டும் கல்விச் சுற்றுலா, ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், தமிழ்மொழியின் ஆற்றலை பெருமையை மாணவர்கள் விரும்பி அறிந்திட தமிழ்க்கூடல், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, வாசிப்பு இயக்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.

"விழுதுகள்" திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மேனாள் மாணவர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பட அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென ரூபாய். 7,500 கோடி மதிப்பீட்டில் "பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்" என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று இதுவரை, 2487 கோடி மதிப்பிலான 3601 வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிதியாண்டில் மேலும் ரூபாய். 1,000 கோடி பள்ளிக் கட்டமைப்பிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மற்றும் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது, இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 21 Feb 2024 5:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  2. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  4. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  5. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  8. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா