/* */

'நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை' - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

கவிதை என்றாலே, நினைவில் வருபவர் கவியரசு கண்ணதாசன்தான். படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பு மக்களையும், தன் யதார்த்தமான பாடல் வரிகளால், வசப்படுத்தியவர். அவர் இறந்தாலும், அவரது கவிதையான பாடல்வரிகளால் இன்றும், ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

HIGHLIGHTS

நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்
X

கவியரசு கண்ணதாசன் நினைவு தினம் இன்று!

இன்று, அக். 17, கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள். காலத்தை வென்ற அந்த கவிஞரை பற்றி, கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவில், தனக்கென தனி பாணியில் பாடல்களை தந்தவர் கவியரசு கண்ணதாசன். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்கள் மற்றும் நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.


வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில், 'நாராயணன்' என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ம் ஆண்டில், திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம், 'பொன்னழகி' என்னும் பொன்னம்மா என்பவரோடு, 1950 பிப்ரவரி 9ம் தேதி காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.

கண்ணதாசன், தனது ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 'விசாலி' என்ற மகள் உள்ளார். ஆக, 9 மகன்கள், 6 மகள்கள் என, 15 பிள்ளைகளின் தந்தை கண்ணதாசன்.

இந்து மதத்தில் பிறந்த கண்ணதாசன், மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9 ல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.


மறைவு

உடல்நிலை பாதிப்பு காரணமாக 1981, ஜூலை 24 ல் அமெரிக்காவின் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை, 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22ல் எரியூட்டப்பட்டது.

தமிழக அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

கண்ணதாசன், நூற்றுக்கணக்கான நூல்களை இயற்றி உள்ளார். அவற்றில் முக்கியமானது இலக்கிய யுத்தங்கள், சமயம், அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்), நாடகங்கள், அனார்கலி, சிவகங்கைச்சீமை, ராஜ தண்டனை மற்றும் பகவத் கீதை, அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, திருக்குறள் காமத்துப்பால், சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல், சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது ஆகிய இலக்கிய நுால்களுக்கு உரை எழுதியுள்ளார்.

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

*காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!' பெருந்தலைவர் காமராஜரின் சொன்னது இது.

*`நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்…

*கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம்.

* கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று `கன்னியின் காதலியில்' எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.

*எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

* மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

*வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

*கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம்.

*முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை… அது நினைவை இழப்பதில்லை!''

*கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,' தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,'' `சம்சாரம் என்பது வீணை'' ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

*கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்' 'என்பார்.

*காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை.

*ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில்; `பராசக்தி','`ரத்தத்திலகம்'',`கறுப்புப்பணம்',' `சூரியகாந்தி'.' உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

*படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்

*கண்ணதாசன் இறந்துவிட்டார்'' என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

*உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்… புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!'

*தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்' என்றார்.


*காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே. ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்' என்பார் ஜெயகாந்தன்.

*திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது'' என்றார்.

*குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை' என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

*பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது' என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

*அச்சம் என்பது மடமையடா,' `சரவணப் பொய்கையில் நீராடி,' `மலர்ந்தும் மலராத…,' `போனால் போகட்டும் போடா..,' `கொடி அசைந்ததும்,' `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,' `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,' `எங்கிருந்தாலும் வாழ்க,' `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,' `சட்டி சுட்டதடா கை விட்டதடா…, ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்.

கண்ணதாசன், மறைந்து 40 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டது; ஆனால், அந்த கவிஞர், அவரது கவிதைகளில், பாடல்களில், படைப்புகளில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

Updated On: 17 Oct 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...