/* */

நடிகர் திலகம் சிவாஜி தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை வில்லியாக அசத்திய நடிகை வடிவுக்கரசி

விமான பணிப் பெண் வேலைக்கு செல்ல ஒரு புகைப்படம் எடுத்தார் வடிவுக்கரசி. அந்த புகைப்படம்தான் சினிமாவில் தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது வடிவுக்கரசிக்குத் தெரியாது.

HIGHLIGHTS

நடிகர் திலகம் சிவாஜி தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை வில்லியாக அசத்திய நடிகை வடிவுக்கரசி
X

நடிகை வடிவுக்கரசி

வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னிப் பருவத்திலே. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார்.

அருணாச்சலம் திரைப்படத்தில் கதாநாயகனின் பாட்டியாக இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் – சந்திரா தம்பதியருக்கு மகளாக பிறந்த வடிவுக்கரசி கல்லூரிப் படிப்பைப் தொடர வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் சேர்ந்தார்.

நிறைய படிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த வடிவுக்கரசியால் பி.யு.சி. க்குப் பிறகு தனது படிப்பைத் தொடர முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சினிமா எடுக்கச் சென்ற இவரது தந்தை சந்தித்த பொருளாதார இழப்புக்கள்.

குடும்ப கஷ்டத்தில் பங்கெடுப்பதற்காக வேலைக்கு செல்லத் தொடங்கிய இவர் முதலில் ஊர்வசி என்கிற புடவை கடையில் வேலை பார்த்தார். துணிக்கடையில் வேலை செய்தபடியே சென்னை தூர்தர்சனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர், சினிமா வாய்ப்பைத் தேடிப் போகவில்லை. இவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது .

விமான பணிப் பெண் வேலைக்கு செல்ல ஒரு புகைப்படம் எடுத்தார் வடிவுக்கரசி. அந்த புகைப்படம்தான் சினிமாவில் தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது வடிவுக்கரசிக்குத் தெரியாது. அந்த போட்டோவை எடுத்த ரமேஷ் என்பவர், அப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் பாலகுருவிடம் காட்ட, அதைத் தொடர்ந்து அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்திலிருந்து வடிவுக்கரசிக்கு அழைப்பு வந்தது.

சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்ற போதிலும் அதை நேரடியாகச் சொல்லிவிட்டுத் திரும்பிவிட அம்மன் கிரியேஷன்ஸ் சென்ற போதுதான் இயக்குனர் பாரதிராஜாவை சந்திக்கின்ற வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கிற வாய்ப்புதான் இவரைத் தேடிவந்த வாய்ப்பு. ஆனால் அப்போது ஒல்லியாக இருந்தார். அதோடு அவரால் நடிக்கின்ற மன நிலையில் இவர் இல்லாததால், தன்னுடைய மறுப்பை நாகரீகமாகத் தெரிவித்துவிட்டுத் திரும்பிவிட்டார்.

அவர் பேசிய ஸ்டைலிஷ் ஆன ஆங்கில பேச்சை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, பிறகு அவர் இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தில் ஹோட்டல் வரவேற்புப் பெண் வேடத்தில் நடிக்க அழைத்தார். ஒரு சிறு வேடம் என்பதால் அவரது பேச்சுக்கு மதிப்பளித்து அந்த வேடத்தில் நடித்தார். இவர் நடித்தது இவரது குடும்பத்தினர் எவருக்கும் அப்போது தெரியாதாம்.

படம் வெளியான பிறகு, அவரது தந்தையின் நண்பர்களான தேவராஜ் மோகன், பி.மாதவன், எஸ்.பி.முத்துராமன் போன்றோர் அவரது திறமையை பாராட்டியதோடு, தொடர்ந்து படங்களில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகே வீட்டில் சம்மதம் கிடைத்து நடிக்க வந்திருக்கிறார்.

ஆர்.சி.சக்தி இயக்க இருந்த 'ஆனந்தம் இன்று ஆரம்பம்' படத்தில் நடிக்க ஒரு கதாநாயகி தேவைப்பட்ட போது, அதில் நடிக்க வடிவுக்கரசியை சிபாரிசு செய்தவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நாயகனாக நடித்த கமல். ஒரு படத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று எல்லா நடிகைகளையும் போல ஆரம்பத்தில் கூறிக்கொண்டி ருந்த இவர், பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் நடிக்க ஆரம்பித்தார்.

காமசாஸ்திரம், சித்திரம் பேசுதடி, காலம் ஒரு நாள் மாறும் என்று எண்ணற்ற படங்களில் கதாநாயகியாக நடித்த போதிலும், பாக்கியராஜ் கதை வசனத்தில் உருவான அம்மன் கிரியேஷன்ஸின் கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில்தான் இவரது திறமை முழுமையாக வெளிப்பட்டது. அந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால் வடிவுக்கரசியைத் தேடி எண்ணற்ற பட வாய்ப்புகள் வந்தன

பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் குணசித்திர வேடங்களுக்கு மாறினார். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மனைவியாக பாரதி ராஜாவின் முதல் மரியாதை படத்தில் இவர் நடித்த நடிப்பு திரை விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டையும் இவருக்கு பெற்றுத் தந்தது. அதே போன்று இவருக்கு மாபெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த இன்னொரு படம் ரஜினிகாந்தின் அருணாச்சலம். அந்தப் படத்தில் இவர் ஏற்ற வேதவல்லி பாத்திரம் இவரது திரை வாழ்க்கையில் இவரால் மறக்க முடியாத ஒரு பாத்திரம்

தொண்ணூற்றி ஐந்து வயதுக் கிழவியாக கூன் முதுகுடன் வந்து, ''அனாதைப் பயலே… யார் சொத்த யாருக்குடா எழுதுறது'' என்று அந்த படத்திற்காக இவர் வசனம் பேசி நடித்த போது ரஜினி முதற்கொண்டு அதில் நடித்த 2500 நடிகர்களும் கைதட்டிப் பாராட்டியது சினிமா உலக வாழ்க்கையில் இவரால் என்றும் மறக்க முடியாத ஒரு தருணம்

பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை யாராலும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள வடிவுக்கரசி ஒரு தயாரிப்பாளரும் கூட .

தனது மந்திராலயா ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் பில்ல கிருஷ்ணமூர்த்தி இயக்கிய அன்னை என் தெய்வம் என்கிற படத்தை தயாரித்தார். இதில் கே.ஆர்.விஜயா பிரதான வேடத்தில் நடிக்க, கதாநாயகனாக விஜயகாந்த், நாயகியாக மாதுரி நடித்திருந்தார்.

வடிவுக்கரசிக்கு ஒரே மகள். பெயர் சண்முகப் ப்ரியா. நடிகை ஸ்ரீப்ரியா இவரது நெருங்கிய தோழி. அவரது பெயரையும், தனது தந்தையின் பெயரையும் சேர்த்து சண்முகப் ப்ரியா என்று பெயர் வைத்தார்.

சண்முகப்ரியா விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். ராஜாராணி, நான் சிகப்பு மனிதன், சமர் போன்ற படங்களின் படத்தொகுப்பாளரான ரூபன் என்பவருக்கு சண்முகப் பிரியாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார் வடிவுக்கரசி.

எந்த பாத்திரத்தை ஏற்றுக் கொண்டாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலவ வைக்கக் கூடிய ஆற்றல் பெற்ற தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் இவர்.

Updated On: 7 July 2021 2:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!