/* */

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி-டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி-டாக்டர் ராமதாஸ்
X

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் ஒற்றை நீதிபதி, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆணையிட்டார்.

அதன்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களை கருத்தில் கொள்ளாத எந்திரத்தனமானது ஆகும்.

இந்தியாவுக்குள் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்து தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது.

இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பொருந்தாது. இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டு விட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை உக்கிரமாக போர் நடைபெற்றது.

அந்தக் காலக்கட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல் ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர்.

அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

சொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களை பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்கு வகை செய்வதற்காகவே 1951ஆம் ஆண்டில் ஐ.நா. அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாததாலும் தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல.

அதுமட்டுமின்றி மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல.

எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தினார்.

Updated On: 31 July 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி