/* */

புதிய கல்வி கொள்கை அம்சங்களை அமலாக்கக்கூடாது: திமுகவுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை

புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை அமலாக்கும் திட்டங்களை திமுக அரசு கைவிட வேண்டும். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக்.

HIGHLIGHTS

புதிய கல்வி கொள்கை அம்சங்களை அமலாக்கக்கூடாது: திமுகவுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை
X

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமலாக்கும் திட்டங்களை திமுக அரசு கைவிட வேண்டும். மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டியில் கூறியதாவது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது:-

புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமலாக்கும் திட்டங்களை திமுக அரசு கைவிட வேண்டும். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் விதமாக 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை கொண்டு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 12ம் வகுப்பு முடித்தவர்களும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்களும் வகுப்பெடுக்கலாம் என்ற அடிப்படையில் அதற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன. ஆசிரியர் பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ரூ.200 கோடி செலவில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாகவே உள்ளதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். இது காலப்போக்கில் அரசுப் பள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துக்களை கொண்டதாகவே அமையும்.

மாணவர்கள் கல்வி கற்பதற்காக அந்தந்த பகுதிகளை சார்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற புதிய கல்வி கொள்கையின் இன்னொரு முகமாகவே தற்போது தன்னார்வலர்களை வகுப்பெடுக்க பயன்படுத்தி கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் முழு வடிவமும் தேசியக் கல்விக் கொள்கையின் பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் உள்ளது.

அரசுப் பள்ளிக் குழந்தைகளது கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டம் என்றால், அரசுப் பள்ளிகளின் தரம் சரியில்லையா? சரியில்லை எனில் அதன் போதாமைகளை சீரமைக்க அரசு ஏன் முயற்சிக்கவில்லை? என்பன போன்ற கேள்வி எழுகிறது. பள்ளி வயது குழந்தைகளின் கற்றலை முறை சார் கல்வி வழியாகக் கொடுப்பது தான் சிறந்தது என்றும், மாறாக இல்லம் தேடி கல்வி என்ற முறைசாராக் கல்வியின் வடிவங்கள் சிறார்களை பள்ளிக் கல்வியை விட்டு தூர விலக்கிவிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பள்ளிக் கல்வி தரமான கல்வியாக உருவாக வேண்டுமெனில் கற்றல் இடைவெளி நீங்க வேண்டுமெனில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், குறிப்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே இருக்கின்றன. பள்ளிகளில் ஆசிரியர் இருந்தாலே பெருமளவு கற்றல் இடைவெளி நீங்கும்.

அதேபோல் தமிழகத்தில் 3, 5, 8 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கற்றல் குறைபாட்டைப் போக்குவதற்காக இந்த திறனறி தேர்வை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களின் திறனை தேர்வு மூலம் கணிக்கும் இத்தகைய துவக்கக் கல்வி திறனறி தேர்வு முறையும் புதிய கல்விக்கொள்கையின் அம்சத்தை சார்ந்தது தான்.

ஆகவே சமூக நீதியை உறுதியாகப் பற்றிப்பிடித்துள்ளதாக கூறும் திமுக அரசு புறவாசல் வழியாக சமூக நீதிக்கெதிரான ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய கல்விக் கொள்கையின் சாரங்கள் நிறைந்த அம்சங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக ஆளுநரின் நிர்வாகத் தலையீடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல், ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தை வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தினார். மாவட்ட சுற்றுப்பயணம் என்ற பெயரில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் இன்றி, அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வை மேற்கொண்டார். இதற்கு எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தன.

தற்போதைய ஆளும் கட்சியான திமுக, ஆளுநரின் இத்தகைய நிர்வாக தலையீடுகளால் தமிழகத்தில் இரட்டை நிர்வாகம் வெளிப்படையாக நிலவுவதாக அப்போது குற்றம் சாட்டியது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி அவர்களும் முன்பு பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட அதே நிர்வாகத் தலையீடுகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. துறை ரீதியாக மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்ய ஏதுவாக தகவல்களைத் தொகுத்து வைக்கும்படி தமிழக தலைமைச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கை அந்த குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது.

கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக இருந்து அப்போதைய ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகளை மிகக்கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆட்சியில் இருக்கும் போது ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டு அமைதிக் காப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். இதனை தமிழகத்தை ஆளும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூகநீதி கண்காணிப்பு குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் சமவாய்ப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இலங்கையின் அடாவடி தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களில் மட்டும் இலங்கை கடற்படையின் ஏராளமான அத்துமீறல் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் உச்சக்கட்டமாக கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர் ராஜ்கிரண் பலியாகியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியும், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் தாக்குதல் நடத்தியும், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் அராஜகத்தை தடுத்து நிறுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை நடக்கும் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கை கடற்படையால் கொலையுண்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடல் உடர்கூறாய்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் உண்மையை அறிய திமுக அரசு குறைந்தபட்ச உடற்கூராய்வு நடவடிக்கையை கூட மேற்கொள்ளவில்லை. மீனவர் ராஜ்கிரணின் உடல் அவரது வீட்டிற்கு கூட கொண்டு செல்வதை காவல்துறை தடுத்துள்ளது. சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட உடலின் முகம் கூட குடும்பத்தினருக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் திமுக அரசின் அணுமுறையானது, கடந்த அதிமுக அரசின் அணுகுமுறையை போன்றே உள்ளது.

அதுமட்டுமின்றி மீனவர்களின் மீதான தாக்குதல் மற்றும் மரணத்திற்கு நீதிவேண்டி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை பாஜகவுடன் இணைந்து கொண்டு காவல்துறை கலைக்க முற்பட்டுள்ளது. பாஜகவுடன் இணைந்து காவல்துறை முரட்டுத் தனமாக நடந்துகொண்டுள்ளது. என்கிற தகவலை புறக்கணிக்க முடியாது. எனவே இந்த விசயத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் திமுக அரசு தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த சூழலில் பெரும்பாலான குளங்கள் இன்னும் தூர் வாரப்படவில்லை. இதனால் போதிய அளவு நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். மேலும் அவற்றின் மதகுகளை சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

டீசல் விலை உயர்வால் பரிதவிக்கும் மீனவர்கள் - டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதேபோல் மீனவர்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாயை தொட்ட நிலையில் மீனவர்கள் அதை வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் ஒவ்வொரு முறை கடலுக்கு சென்று வரும் போதெல்லாம் நஷ்டத்தை சந்திப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு மானியம் முறையில் விசைப்படகுகளுக்கு 1800 லிட்டர் டீசல் கொடுத்தாலும், அந்த மானிய டீசலும் 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. டீசல் விலை உயர்வால் பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வரும் நிலையில் உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கும் மானிய டீசலின் அளவை உயர்த்த வேண்டும். விசைப்படகிற்கு அரசு வழங்கக்கூடிய 1800 லிட்டர் டீசல் மானியத்தை 3500 லிட்டராகவும், நாட்டுப் படகிற்கு வழங்கும் 350 லிட்டர் டீசல் மானியத்தை 700 லிட்டர் டீசல் மானியமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம். என்று தெரிவித்தார்.

Updated On: 28 Oct 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!