/* */

கல்லூரி தமிழ்த்துறை மாணவர் வாசகர் வட்டவிழா: திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா

பெண் கல்வியே சமுதாயத்தை உயர்த்தும். தாய் தந்தையர் வளர்ப்பு தான் நம் வாழ்வில் உயர்வு தரும் என்றார் இயக்குநர் கஸ்தூரிராஜா

HIGHLIGHTS

கல்லூரி தமிழ்த்துறை மாணவர் வாசகர் வட்டவிழா: திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா
X

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை மாணவர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா.

உலகிற்கே நாகரிகம் கற்றுத் தந்தவன் தமிழன் என்றார் திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை மாணவர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது: திருநெல்வேலி தமிழ் விளையும் இடம். தமிழ் அறிஞர்கள் நிறைந்த இடம் திருநெல்வேலி. அந்தத் திருநெல்வேலியில் மாணவர்களே நூல்களைத் திறனாய்வு செய்யும் மாணவர் வாசகர் வட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரித் தமிழ்த்துறையால் நடத்தப்படுவதும் அதில் நான் எழுதிய பாமர இலக்கியம் நூல் அறிமுகமாவதும் என் பேறு. நெருப்பைப் போல் கனன்று கொண்டே இருப்பவன் தமிழன்.

இந்த உலகின் முதல் குடிமகன் தமிழன், தமிழர் வாழ்வு வீரம் செறிந்தது, தமிழர் வாழ்வு பொருள் மிக்கது, உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தவன் தமிழன், தமிழ் மண் வாழ்க்கையை, தமிழர் வாழ்க்கையை பாமர இலக்கியமாகப் படைத்துள்ளேன். ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கும் பெண்குழந்தைக்குமான உறவு புனிதமானது. அவள் தன் சகோதரனாக அக்காளையைக் கருதினாள். யாருக்கும் அடங்காத காளை பெண்ணுக்கு அடங்கியது. அவள் திருமணம் நடக்கவேண்டுமானால் அந்தக் காளையை அடக்கியாக வேண்டும். அரியவகை நாற்பது நாட்டு மாடுகள் குறித்து எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் இருந்து தான் உலக நாகரிகம் பரவியது. என் சாதி, என் மதம் என்பதைத்தாண்டி சகோதர சமயத்தை மதிக்கவும், அவர்களை உறவுப்பெயர் சொல்லி அழைக்கவும் என் கிராமம் எனக்குக் கற்றுத் தந்தது. என் நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள், திரைத்துறையிலே நடிகர் ராஜ்கிரண் என்மீது பேரன்பு கொண்டவர். என் வாழ்வின் வழிகாட்டி அவர் தான். சமய நல்லிணக்கம் இன்றைய தேவை. தமிழ் நம்மை உயிர்த்துடிப்போடு என்றும் இளமையாக வைத்திருக்கிறது.

மனஅழுத்தம் வராமல் இலக்கியம் காக்கிறது. வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு மனிதம் என்கிற சொல் காரணமாகிறது. தேனி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமத்திலிருந்து சென்னைக்குக் காலடி வைக்கும் போது என் பையில் ஒரு ரூபாய் தான் இருந்தது. கடின உழைப்பு சிகரத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. மனைவி சொன்னால் கேளுங்கள் எனும் ரகசியத்தை என் தாத்தா, என் அப்பாவுக்குச் சொல்லி அவர் எனக்குச் சொன்னார், அதுவே என் வெற்றிக்குக் காரணம். பெண் தான் எல்லாமே, பெண் இல்லை என்றால் எதுவுமே இல்லை. தாய்மையைப் போன்ற வரம் ஏதும் இல்லை.

இந்தக் கல்லூரியில் மாணவியர் நிறைய பேர் பயில்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் கல்வியே சமுதாயத்தை உயர்த்தும். தாய் தந்தையர் வளர்ப்பு தான் நம் வாழ்வில் உயர்வு தரும். தாய் அன்புவயப்பட்டவள், தந்தை கண்டிப்பானவர், தந்தையின் அன்பின் ஆழம் அறிய முடியாதது. தாய் தந்தையர் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் வகுப்பில் சரியாக நடப்பர். கல்லூரி நாட்களில் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் பயின்ற போது நான் எழுதிய வெண்பா இன்று என்னை இலக்கியம் எழுத வைத்தது. அதுவே திரைப்படங்களுக்கு வசனம் எழுத வைத்தது.

வாசிப்பு இல்லை என்றால் இது சாத்தியமில்லை. பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதில் இன்று கவனம் இல்லாமல் போய்விட்டது. இளம் குற்றவாளிகள் உருவாவதற்குக் காரணம் குழந்தைகள் வளர்ப்பில் உள்ள குறைபாடு தான். மூவாயிரம் பக்கங்கள் எழுதிய கிராமத்து வாழ்வின் தொகுப்பே பாமர இலக்கியம். நூறு ஆண்டுகளாகக் கலாச்சாரம் சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது.

நம் உணவுப் பொருட்கள் மாறி பீசா, பர்கர் என்று போய் நிற்கிறது. ஆடைகள் அணிந்தும் நாம் நிர்வாணமாய் நிற்கிறோம் ஏன்? கிழிந்த உடையைத் தைத்துப் போட்டது அந்தக்காலம், இருக்கும் ஆடையைக் கிழித்துப் போடுவது இந்தக் காலம். என் கலப்பை, என் மண், என் இயற்கை என்றும் என் நிம்மதி தருவது. என் இலக்கியம் மண் சார்ந்தது, என் இலக்கியம். எழுத எழுத தமிழ் நம்முள் ஊற்றெடுக்கும். எழுதுகிறவனே இந்த உலகில் நிலைத்து நிற்கிறான். இறந்தும் நாம் வாழவேண்டும் என்றால் எழுதவேண்டும், நிறைய வாசிக்கவேண்டும். என்றார் இயக்குநர் கஸ்தூரிராஜா.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத் தமிழ்த்துறைகள் இணைந்து நடத்திய மாணவர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் எஸ். ஹெச்.முகமது அமீன் தலைமையுரையாற்றினார். கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்புரையாற்றி, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா எழுதியுள்ள பாமர இலக்கியம் எனும் நூலைத் திறனாய்வு செய்தார்.

கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் செய்யது முகமது காஜா, கல்லூரித் தேர்வாணையர் முனைவர் சே.மு.அப்துல் காதர், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.சே.சேக் சிந்தா, ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் சேக் முகைதீன் பாதுஷா, நூலகர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமர இலக்கியம் நூல் குறித்து பத்து மாணவ- மாணவியர் கருத்துரை வழங்கினர். தமிழ் பண்பாடு, நூல் உருவாக்கம், வாசிப்பு இயக்கம் தொடர்பான மாணவர்களின் ஐயங்களுக்கு திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா விளக்கம் அளித்து மாணவ- மாணவியரோடு உரையாடினார்.அரசுதவி பெறா பாடங்களின் தமிழ்த்துறைத் தலைவர் சாதிக்அலி நன்றிகூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை செய்திருந்தது.

Updated On: 28 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’