/* */

தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்து காட்சியளிக்கும் நரிக்குறவர் கூடாரங்கள்..

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவதி அடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்து காட்சியளிக்கும் நரிக்குறவர் கூடாரங்கள்..
X

கூடாரங்களைச் சுற்றி காணப்படும் மழைநீர், கழிவுப் பொருட்கள்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும் மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தற்காலிக கூடாராம் அமைத்து தங்கி உள்ள நரிக்குறவர் சமுதாய மக்களின் கூடாரங்களைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் அவதி அடைந்துள்ளனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 52 குடும்பத்தினர் சுமார் 200 பேர் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.


தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நரிக்குறவர்களின் கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் தங்களால் கூடாரத்துக்குள் இருக்க முடியவில்லை என்றும் இதனால் பேருந்து நிலையத்தில் படுக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், அப்படி தங்கினால் அதிகாரிகள் விரட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் என்பர் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். மழைக் காலத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும்போது பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. எங்கள் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் தெரிவித்து உள்ளோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளது என மாவீரன் தெரிவித்தார்.

மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடாரத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். மேலும், கனமழை பெய்தால் அவர்களது கூடாராம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கூடாரங்களை சுற்றி ஏராளமான கழிவுப் பொருள்களும், மழைநீரும் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசியபடி சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநகாரட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பகுதியில் நரிக்குறவர்கள் 52 பேருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு வீடு கட்டி செல்லாமல் புதி பேருந்து நிலையம் பகுதியில் தங்கி உள்ளனர் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் நரிக்குறவர்களின் தற்காலிக கூடாரத்தை மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால், தங்களது குழந்தை குட்டிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டு வருவதாகவும், பேரூரணி பகுதிக்கு சென்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 6 Nov 2022 8:49 AM GMT

Related News