/* */

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்

தனியார் சந்தைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்
X

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மெயின் பஜார் பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி சந்தை தற்போது கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக, நகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கான கட்டுமான பணியை தொடங்கி உள்ளது.

இதனால், அங்கு செயல்பட்டு வந்த மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் தற்காலிகமாக சந்தை அமைத்தனர். கடந்த சில நாட்களாக அங்கு சந்தை செயல்பட்டு வந்த நிலையில், சந்தை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அனுமதி பெறாமல் செயல்படுவதாகக் கூறி அரசு அதிகாரிகள் சந்தை செயல்பட அனுமதி மறுத்தனர். மேலும், இரண்டு நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


இருப்பினும், திட்டங்குளம் பகுதியில் வணிக வளாக சந்தை செயல்பட உரிய அனுமதியை பெற நடவடிக்கை கொள்ளப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், தனியார் சந்தைக்கு அதிகாரிகள் அனுமதியை மறுத்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திட்டங்குளம் ஊராட்சியில் உரிய அனுமதி பெறாமல், செயல்பட்டதாக ஊராட்சி ஒன்றிய ஆணையரால் தடைசெய்யப்பட்டதால் வியாபாரிகளுக்கும் , விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியும், திட்டங்குளத்தில் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Updated On: 28 April 2023 6:16 AM GMT

Related News