/* */

சினிமா உலகை கலக்கிய திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

கிருஷ்ணன்கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்ற கே.வி. மகாதேவன் தமிழ் சினிமா இசையில் தவிர்க்க முடியாத முத்திரை பதித்துள்ளார்

HIGHLIGHTS

சினிமா உலகை கலக்கிய திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
X

1942 -ல், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மனோன்மணி’ படத்தில் இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம், தனது உதவியாளரான மகாதேவனுக்கு ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கொடுக்கிறார். அப்படி மகாதேவன் இசையமைத்த முதல் பாடல், ’மோகனாங்க வதனி’ என்ற பாடல். இதைப் பாடியவர் பி.யூ. சின்னப்பா. இப்படித்தான் மகாதேவனின் திரைவாழ்க்கை துவங்கியது.

இதன்பின் அதே வருடம், ஆனந்தன் (அல்லது) அக்னிபுராண மகிமை என்ற படத்துக்குத்தான் முதன்முதலில் இசையமைக்கிறார் மகாதேவன் (படமோ பாடல்களோ இப்போது துளிக்கூட எங்கும் இல்லை. அழிந்து விட்டன). பின்னர் படிப்படியாக ஒவ்வொரு படமாக இசையமைத்து, ஹெச்.எம்.வி நிறுவனத்துடன் இணைந்து பக்திப் பாடல்களையும் இசையமைத்து வந்தார்.

நாற்பதுகளில் சில படங்களுடன், ஐம்பதுகளில் ஒருசில படங்களுக்கு இசையமைத்து வந்த போது தான், ‘கூண்டுக்கிளி’ படத்தில் மகாதேவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இப்படத்தைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த முதல் படம். இதில்தான் டி.எம்.எஸ் சிவாஜிக்காகப் பாடிய முதல் பாடல் இடம்பெற்றது. (-கொஞ்சும் கிளியான பெண்ணை’).

இதன்பின் சில படங்களுக்குப் பின்னர், குலேபகாவலியில் இடம்பெற்ற ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ பாடலுக்கு மட்டும் கே.வி.எம் இசையமைத்தார் (படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் மட்டும் கூண்டுக் கிளிக்காகப் போடப்பட்டது. ஆனால் அதில் உபயோகமாகவில்லை. இயக்குநர் ராமண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படத்தில் அப்பாடல் உபயோகப்படுத்தப்பட்டது). இதன் பின்னர் வெளியாகி, நன்றாக ஓடி, மகாதேவனை மிகவும் பிரபலப்படுத்தியது தான் ‘டவுன்பஸ்’. அப்படத்தின் பாடல்களை இன்றும் யாருமே மறக்க இயலாது (’பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா’, ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா’). பின்னர் தேவர் பிலிம்ஸின் ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்துக்கு இசையமைத்தார் மகாதேவன். அதுதான் தேவர் பிலிம்ஸின் முதல் படமும் கூட (’மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே’, ’அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ’என் காதல் இன்பம் இதுதானா’). இதன்பின்னர் தேவர் பிலிம்ஸின் பல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்தார்.

இதன்பின் தமிழின் புகழ்பெற்ற இசைமைப்பாளர்களில் ஒருவராக மாறினார் மகாதேவன். எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமாக இசையமைத்து, இரண்டு தேசிய விருதுகளும் வாங்கியிருக்கிறார் (கந்தன் கருணை & சங்கராபரணம்). எம்.ஆர். ராதா குத்தாட்டம் போட்ட ‘மாமா மாமா மாமா’ (மகாதேவனையே ‘மாமா’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது), ’ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’, ’ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்’, ’வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரே வந்தாள்’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘ஒரு நாள் போதுமா’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’,

‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’, ‘பதினாறும் நிறையாத பருவமங்கை’, ‘பட்டணம்தான் போகலாமடி’, ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, ‘வீணைக்கொடியுடைய வேந்தனே’ (வெங்கட்ராகவனுக்கு மிகப்பிடித்த பாடல் இது. ராவணனே விஸ்தாரமாகப் பாடும் பாடல்), ‘மண்ணுக்கு மரம் பாரமா’, ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’, ‘கல்யாணம் ஆனவரே சௌக்யமா’, ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள்’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்’, ‘கட்டித்தங்கம் வெட்டியெடுத்து’, ‘கங்கைக்கரைத் தோட்டம்’, ‘ஒருவன் மனது ஒன்பதடா’, ’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’, ‘மஞ்சள் முகமே வருக’, ‘ஹலோ ஹலோ சுகமா’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ஏ.பி. நாகராஜனின் பாடல்கள், சங்கராபரணம் பாடல்கள் என்று கே.வி. மகாதேவனின் பிரபல பாடல்களை இங்கே பட்டியல் போட ஆரம்பித்தால், நூறு பக்கங்களையும் தாண்டி எழுதவேண்டிவரும் என்பதால், அவரது இசையில் பிடித்த சில பாடல்களை மட்டும் இங்கே கவனிக்கலாம்.

அதற்கும் முன்னர், கே.வி. மகாதேவன் எப்படி இசையமைப்பார் என்றும் பார்க்கலாம். தமிழில் ஒரு அரிய மாண்பை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு ட்யூனை அமைப்பார்கள். பின்னர் அந்த மெட்டுக்கு ஏற்ப பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதுவார்கள். இது தான் வழக்கம். ஆனால் கே.வி. மகாதேவனோ, முதலில் பாடலை எழுதி வாங்கிக்கொள்வார். அதன்பின் அந்தப் பாட்டுக்கு மெட்டமைப்பார். இதுதான் மகாதேவனின் கொள்கையும் கூட. எனவே, அவர் இசையமைத்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இப்படி இசையமைக்கப்பட்டவையே.

அறுபதுகள் தவிர, எழுபதுகள், எண்பதுகளில் கூடப் பிரமாதப்படுத்தியவர் மகாதேவன். அவருக்கு தேசிய விருது வாங்கித்தந்த ‘சங்கராபரணம்’, எண்பதுகளின் படமே. தமிழில் இது பிய்த்துக்கொண்டு ஓடியது நினைவிருக்கலாம். இப்படத்தின் பாடல்கள் இன்றும் மறக்க இயலாதவை. கே.வி. மகாதேவன் இசையமைத்து, பி. மாதவன் இயக்கி, 1963ல் வெளிவந்த படம், ‘அன்னை இல்லம்’. சிவாஜி கணேசனும் தேவிகாவும் நடித்தது. இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் பிரமாதமாக இருக்கும். ‘எண்ணிரண்டு பதினாறு வயது’ பாடலை மறக்கவே முடியாது. ’நடையா இது நடையா’ பாடல் ஒரு காலத்தில் தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் டேப் தேய்ந்து போகும் அளவுக்கு ஒளிபரப்பட்ட பாடல்.

இப்படத்தில்தான் ‘மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்’ என்ற அற்புதமான பாடல் வரி இடம்பெறுகிறது. கதாநாயகனும் நாயகியும் காதல் பொங்கப் பாடிக்கொள்ளும் பாடல். இந்தப் பாடலின் மெட்டை கவனித்துப் பாருங்கள். அவ்வளவு அழகான ட்யூன் இது. பாடிய சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். பாடலை எழுதியவர் கண்ணதாசன். சொல்லவும் வேண்டுமா பாடலின் இனிமைக்கு?. நடிப்புக்கு ஒரு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால் இசைக்கு ஓர் திரையிசைதிலகம் என்றால் கேவி. மகாதேவன்தான் என்பதே நிதர்சனம்.

Updated On: 15 March 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  6. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  8. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  10. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்