/* */

கலெக்டர் பெயரில் மோசடி செய்த பெண் கைது: கணவர் தலைமறைவு

மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி மருத்துவமனைகள், துணிக்கடை உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண்ணை சைபர் க்ரைம் போலீஸார் கைது.

HIGHLIGHTS

கலெக்டர் பெயரில் மோசடி செய்த பெண் கைது: கணவர் தலைமறைவு
X

கைது செய்யப்பட்ட ரீட்டா பபியா.

தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் சிலரை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர், அவர்களை ஒரு சில அரசு திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், மேற்படி திட்டத்திற்காக தலா ரூ.50,000 அனுப்புமாறும் கூறி குறிப்பிட்ட நபர்களுக்கு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பியுள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்ததகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், மர்ம நபர்கள் பேசிய இரண்டு மொபைல் எண்கள், ஒரு வங்கி கணக்கு எண் ஆகியவற்றை போலீஸாரிடம் கொடுத்து, இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது கோயம்புத்தூர் ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவரின் வங்கிக் கணக்கு என்பதும், அதே பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படை போலீஸார் கோயம்புத்தூருக்கு விரைந்து ரெஜினாவை பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட ரெஜினா அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும், மோசடி கும்பலால் அவர் இச்சம்பவத்தில் பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (எ) சந்தான பாரதி (65) மற்றும் அவரது மனைவி ரீட்டா பபியா (50) என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, ரீட்டா பபியாவை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சியில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையின் விசாரணையில் ரீட்டாவும் அவரது கணவர் சந்தான பாரதியும் சேர்ந்து திருச்சி, நாமக்கல், வேலூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களின் பெயரை பயன்படுத்தி அம்மாவட்டங்களில் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பதும், சந்தான பாரதி ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Updated On: 27 July 2021 2:08 PM GMT

Related News