/* */

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கடையம் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வழங்கக் கோரி யூனியன் ஆணையாளரை முற்றுகையிட்டு கட்டளையூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
X

 குடிநீர் கேட்டு ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம், கடையம் யூனியனுக்கு உட்பட்டது ஐந்தான்கட்டளை பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட கட்டளையூர் மக்கள், உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவருக்கு வாக்கு அளிக்காததால் குடிநீர் வழங்க பஞ்சாயத்து தலைவர் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பஞ்சாயத்து தலைவர் முப்பிடாதியின் கணவர் பெரியசாமி கட்டளையூர் பகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி கட்டளையூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து அலுவலகத்தை கட்டளையூர் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னரும் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால் கட்டளையூர் கிராம மக்கள் பஞ்சாயத்து துணைத் தலைவர் சுதன் தலைமையில் கவுன்சிலர் ஜனதா முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கடையம் யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததுடன், யூனியன் ஆணையாளர் கண்ணன் அறையை முற்றுகையிட்டு முறையாக குடிநீர் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கட்டளையூர் கிராம மக்களுடன் யூனியன் ஆணையாளர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இன்று மாலை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக 4 நாட்கள் தண்ணீர் கொடுக்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து இரு கிராம மக்களுடன் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதன் பின்னர் கட்டளையூர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கட்டளையூர் கிராம மக்களின் முற்றுகை போராட்டத்தால் சிறிது நேரம் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 28 Sep 2023 6:08 AM GMT

Related News