/* */

குறுகிய சர்வீஸ் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

மேம்பாலம் கட்டும் பணிக்காக குறுகிய சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குறுகிய சர்வீஸ் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
X

கோப்புப்படம் 

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பழைய மேம்பாலத்தையொட்டி, 24.76 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த டிசம்பரில் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அரியானூரில் இருந்து சேலம் வரும் வாகனங்கள், குறுகிய சர்வீஸ் சாலை வழியே திருப்பி விடப்பட்டுள்ளன. 1 கி.மீ., உள்ள அச்சாலையில் கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமே செல்ல முடியும். இடையே, ஏதாவது ஒருவர் முந்த முயன்றால் மேற்கொண்டு செல்ல முடியாமல் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் குறுகிய சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க, பாதி வழியை அடைத்துவிட்டனர். இதனால் சேலம் - கோவை 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சூளைமேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கரபுரநாதர் கோவில் வரை, 3 கி.மீ.,க்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன.

இதை தவிர்க்க சில வாகன ஓட்டிகள் விதிமீறி, சூளைமேடு பிரிவில் இருந்து, 4 வழிச்சாலை எதிர் திசையில் ஆபத்தான முறையில் உத்தமசோழபுரம் மேம்பாலத்தை கடந்து சென்றனர். தொடர்ந்து சில தனியார், அரசு பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும், எதிர் திசையில் விதிமீறி சென்றனர். இதனால் உத்தமசோழபுரம் பழைய மேம்பாலத்தில், சேலத்தில் இருந்து அரியானூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சிக்கி, 4 வழிச்சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியே கடக்கவே மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதுபோன்று அடிக்கடி ஏற்படுவதால், நெடுஞ்சாலைத்துறையினர், குறுகிய சர்வீஸ் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 29 Jan 2024 9:37 AM GMT

Related News