/* */

வேங்கைவயல் தலித் மக்களை சந்திக்கத் தடை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

வேங்கைவயல் தலித் மக்களை சந்திப்பதற்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்

HIGHLIGHTS

வேங்கைவயல் தலித் மக்களை சந்திக்கத் தடை:  தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
X

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் மக்களை சந்திப்பதற்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் மக்கள் தாங்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக வெளியிடுகிற காணொளிகள் அம்மக்கள் மிகப் பெரிய அளவில் ஆளுமைச் சிதைவுக்கு உள்ளாகி இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், அவர்களைச் சந்தித்து ஆற்றுப்படுத்துவதற்காக வேங்கைவயல் சென்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவரமன், முன்னணியின் மாவட்டத் தலைவர் சலோமி, மாவட்டச் செயலாளர் ஜீவானாந்தம் மற்றும் அன்புமணவாளன் உள்ளிட்ட தோழர்களை திங்கள்கிழமை வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்றோம். அப்போது, காவல்துறையினர் வேங்கைவயல் கிராம எல்லையில் எங்கiளைத் தடுத்துநிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விடாமல் அராஜகம் செய்தனர்.

வேங்கைவயலில் பாதிக்கப்பட்டட மக்களை யாரும் சந்திக்கக்கூடாது, வேங்கைவயலுக்குள் நுழையக்கூடாது என்று எந்தவிதமான பகிரங்க உத்தரவையும் மாவட்ட வருவாய் துறையோ காவல்துறையோ இதுவரை வெளியிடவில்லை. வேங்கைவயலுக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று முறையான உத்தரவோ எழுத்துப்பூர்வமான ஆவணமோ இல்லாமல் வெறும் வாய்மொழி உத்தரவு என்று சொல்லி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்கிற அமைப்புகளை தடுப்பது சட்ட விரோதமானது.

2022 டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களிலிருந்து ஏறக்குறைய 5 மாத காலமாக விசாரணை என்கிற பெயரால் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொண்ணா துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வேங்கைவயலில் எண்ணற்ற தீண்டாமைப் பிரச்சனைகள் இருப்பதை மாவட்ட ஆட்சியரே தனது நேரடி தலையீட்டின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் நுழைந்த கோவில் தீட்டுப்பட்டதாகக் கூறி பலமுறை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரட்டைக் குவளை பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால் தேநீர்க் கடையே திறக்கப்படவில்லை. தலித் மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்த வேளாண்மை நிலங்கள் இடையில் அபகரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது போலவே மேற்சொன்ன பிரச்சனைகளின் மீதும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்நிலையில், அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையா உள்பட சாதியவாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக காரணம் காட்டி அமைப்புகள் வேங்கைவயலுக்குள் செல்வதை புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை தடுப்பது ஜனநாயக விரோதமானது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவர்களை ஆற்றல்படுத்துவது சட்டரீதியான உதவிகளை செய்வது அமைப்புகளின், தனிநபர்களின் சட்டபூர்வமான ஜனநாயக உரிமை. வெறும் வாய்மொழி உத்தரவு மூலமாக இதனைத் தடுப்பதற்கு புதுக்கோட்டை காவல்துறைக்கு எவ்விதமான உரிமையும் இல்லை.

இந்நிலையில், காவல்துறையோடு போராடி வேங்கைவயல் கிராமத்துக்குள் செல்வதற்கு முற்பட்ட நேரத்தில் தகவல் அறிந்து வேங்கைவயல் கிராம தலித் மக்கள், கிராமத்தைவிட்டு வெளியே வந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களை சந்தித்தனர். தங்களது துயர நிலையை விளக்கினார்கள். காவல்துறையின் தொடர்ந்த அத்துமீறல்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அனுமதிக்காது. அதற்கெதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று தலித் மக்களிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் உறுதியளித்தனர்.

இந்த ஜனநாயக விரோத செயல் நீடித்தால் இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் புதுக்கோட்டை காவல்துறையின் அணுகுமுறையை எதிர்த்து போராட்டம் நடைபெறும். இவ்வாறு கே.சாமுவேல்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 May 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு