/* */

10 ரூபாய் நாணயம் செல்லாதா? மக்களுக்கு விளக்கம் அளிக்க வலியுறுத்தல்..

நாமக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என பரப்பப்படும் சம்பவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

10 ரூபாய் நாணயம் செல்லாதா? மக்களுக்கு விளக்கம் அளிக்க வலியுறுத்தல்..
X

10 ரூபாய் நாணயங்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் 10 ரூபாய் நாணய பயன்பாடு தொடர்பாக வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிலவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பொதுமக்கள் மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட ஆடசியர் ஸ்ரேயா சிங்கிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

இந்திய அரசால் கடந்த சில ஆண்டுகளாக ரூ. 10 நாணயம் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ரிசர்வ வங்கியில் வெளியிடப்பட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.

அண்டை மாநிலமான கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 ரூபாய் நாணயமாக பரவலமாக புழக்கத்தில் உள்ளது. எனினும் தமிழகத்தில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவலையே மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. அதையும் மக்கள் நம்பி வருகின்றனர். இதன் காரணமாக இன்றளவும் பல பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, பல கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இது சம்மந்தமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட வணிகர் சங்கம் மூலம் தொடர்ந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் 10 ரூபாய் நாணயங்களை திருப்பி வாங்க மறுப்பதால் வணிகர்களும் அதை ஏற்க தயங்குகின்றனர்.

மேலும், பல அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும், பல்வேறு டிசைன் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பு.

எனினும், இந்திய ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாமல், வெவ்வேறு வடிவங்களில் இருப்பதால், மக்கள் மத்தியில் அது போலியான நாணயம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் அரசு பல முறை அறிவறுத்தியும், 10 ரூபாய் நாணயத்தை பல வங்கிகள் ஏற்க மறுப்பதால், அவை செல்லாது எனும் வதந்திகள் அதிக அளவில் பரவி உள்ளன.

எனவே, 10 ரூபாய் நாணயம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Nov 2022 11:00 AM GMT

Related News