/* */

பரமத்தி பகுதியில் 6 மாதமாக வசித்து வரும் சிறுத்தை: வனத்துறையினர் அதிர்ச்சி தகவல்

பரமத்தி பகுதியில் 6 மாதத்துக்கும் மேலாக அங்கு சிறுத்தை வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

பரமத்தி பகுதியில் 6 மாதமாக வசித்து வரும் சிறுத்தை: வனத்துறையினர் அதிர்ச்சி தகவல்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, இருக்கூர் , செஞ்சுடையாம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய கிராமங்களில், கடந்த, பிப். 1ம் தேதி முதல், ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட கால்நடைகள், மர்ம விலங்குகள் கடித்துக் கொன்றது. இதையொட்டி பொதுமக்கள் புகாரின் பேரில், அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த கால் தடயங்களை வைத்து, கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க செஞ்சுடையாம்பாளையத்தில் கூண்டு வைத்து, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் காரணமாக, இருக்கூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில், அச்சம் காரணமாக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும், விவசாய பணிக்கு செல்ல முடியாமலும் சிரமப்பட்டனர். அதனால், மனிதர்களை தாக்கும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதையொட்டி, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, பணிகைளை முடுக்கிவிட்டார். மேலும், வனத்துறை சார்பில், சிறுத்தை புலி கண்டறியும் பழங்குடி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் மீன்காலன், பொம்மன் இருவரும் வரவழைக்கப்பட்டு, தேடுதல் பணியை தீவரப்படுத்தினர். மீன்காலன், பொம்மன் இருவரும், முதுமலை மசினகுடியில், 2022ல், நான்கு பேரை கொன்ற, ’டி-23’ என்ற ஆட்கொல்லி புலியை, உயிருடன் பிடித்து புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ட்ரோன் கேமரா மூலமும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், நடந்தை கிராமத்தில் செயல்படாத கல் குவாரியில் இருந்த, 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், கிராமத்துக்குள் திடீரென புகுந்தது. அதையடுத்து, சிறுத்தை புலி, கல்குவாரியில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதை அறிந்த வனத்துறையினர், அங்கு முகாமிட்டு, தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ப.வேலூர் பகுதியில் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலியை, பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம். இந்த நிலையில், நடந்தை கிராமத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பழைய கல்குவாரி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு சிறுத்தை புலி வசிப்பிடம் கண்டுபிடித்துள்ளோம். அங்கு சிறுத்தை புலியின் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில், சிறுத்தையின் 6 மாதத்துக்கு முந்தையது கழிவு என்பது தெரியவந்துள்ளது. மேலும், அங்கு கிடந்த எலும்பு குவியலை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். சிறுத்தை புலி இங்கு நீண்ட காலமாக வசித்து வந்துள்ளது. இங்க சுற்றித்திரிந்த நாய், கோழி, மயில் போன்றவற்றின் இறைச்சியை உண்டு வாழ்ந்து வருகிறது.

தற்போது வெளியே வந்து, வேட்டையாடி வரும் சிறுத்தை புலி, அதன் இருப்பிடத்தில் இருந்து, ஒரு இரவுக்குள், 30 கி.மீ., தூரம் வரை சென்று, மீண்டும் அதன் இருப்பிடத்துக்கு திரும்பி வந்துவிடும். அதன் இருப்பிடத்தில், மனிதர்கள் வாசம் தென்பட்டால் மீண்டும் திரும்ப வராது. அதனால் குவாரி பகுதியில் தற்போது யாரையும் அனுமதிக்கவில்லை. சிறுத்தை புலி பிடிக்க மோப்பநாய் வந்துள்ளது. கூடிய விரைவில் சிறுத்தை புலியை உயிருடன் பிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எம்எல்ஏ பேட்டி:

இது குறித்து பரமத்திவேலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர் கூறியதாவது:

ப.வேலூர் பகுதியில், சிறுத்தை புலி நடமாட்டத்தை கண்டறிந்து, 15 நாட்களாகியும், இன்னும் அதை பிடிக்க முடியவில்லை. இதுவரை 10க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயி பணி, 100 நாள் வேலை வாய்ப்பு போன்ற பணிகளுக்கு செல்ல முடியாமல், மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறை பணியாளர்கள் முயற்சி எடுத்தாலும், அதற்குரிய பலன் கிடைக்கவில்லை.

இனிமேலும் தாமதிக்காமல், சிறுத்தைபுலி பிடிக்கும் பணியில், மத்திய அரசின் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Updated On: 16 Feb 2023 12:15 AM GMT

Related News