/* */

ஜூலை முதல் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும் : ராஜேஷ்குமார் எம்.பி தகவல்

ஜூலை முதல் 3 ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும் என்று ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜூலை முதல் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராசிபுரத்தில்  நின்று செல்லும் : ராஜேஷ்குமார் எம்.பி தகவல்
X

நாமக்கல் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்.

நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமாரின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை முதல் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராமப்புற ஊராட்சிகளின் துப்புறவு பணிகளுக்கு, எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் கொடியசைத்து எலக்ட்ரிக் வாகனங்களை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமானதாக விளங்கும், கொல்லிமலைக்கு செல்வதற்கான முக்கிய ரயில் நிலையம் ராசிபுரம் ஆகும். வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கொல்லிமலைக்கு வருபவர்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் கொல்லிமலை செல்வதை விரும்புவார்கள்.

இதைத் தவிர ராசிபுரம் பட்டு, சேகோ, கோழிப்பண்ணை போன்ற பல்வேறு வணிகங்களுக்கான முக்கிய மையமாகவும் திகழ்கிறது. இங்கு தற்போது மிகக்குறைந்த ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் வியாபாரிகளும், ரயில் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து டெல்லியில் மத்திய ரயில்வே தலைமை அலுவலரை கடந்த 15ம் தேதி நேரில் சந்தித்து, மிக முக்கிய 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை ராசிபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தேன்.

இக்கோரிக்கையை ஏற்று, ராசிபுரம் பகுதி, மக்களின் முன்னேற்றத்திற்காக வரும் ஜூலை மாதத்தில் இருந்து, வண்டி எண் : 16733/16734 ராமேஸ்வரம் - ஓஹா - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ராசிபுரம் வழித்தடத்தில் வாரம் ஒருமுறை காலை 11.58 மணிக்கு நின்று செல்லும். மறு மார்க்கத்தில் சனிக்கிழமை காலை திருப்பதி செல்வதற்கு காலை 4.59 மணிக்கு நின்று செல்லும். அதே போல் வண்டி எண் : 22651 சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ராசிபுரத்தில் காலை 3.27 மணிக்கும், வண்டி எண் : 17236 நாகர்கோயில் - பெங்களுர் செல்லும் ரயில் காலை 3.31 மணிக்கு ராசிபுரத்தில் நின்று செல்லும். மறு மார்க்கத்திலும் இந்த ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகளும் பொதுமக்களும் ராசிபுரம் ரயில் நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் ,இந்த ரயில்கள் தொடர்ந்து, ராசிபுரத்தில் நின்று செல்லும் என எம்.பி ராஜேஷ்குமார் கூறினார்.

Updated On: 24 Jun 2023 8:30 AM GMT

Related News