/* */

மதுரையில் மகளிர் தினவிழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பாலின சமத்துவம் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் விதமாக நிகழாண்டில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது

HIGHLIGHTS

மதுரையில் மகளிர் தினவிழாவை தொடங்கி வைத்த  மாவட்ட ஆட்சியர்
X

சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.

மதுரையில் சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேரு யுவகேந்திரா சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.

விழாவை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் நோக்கிலும், பெண்களுக்கு சம உரிமை, சமூக பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நிலையான எதிர்காலத்திற்கு பாலின சமத்துவம் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்தாண்டு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு பெண் சுயமாக செயல்பட்டு, பொருளாதாரத்தில் சுதந்திரமாக முன்னேறும் போது சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கப்படுகிறார். பெண் கல்வியே பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை , அரசு வேலைவாய்ப்புகளில் 40 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு , பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பெண்களுக்கு சமூகபாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும். இந்நன்னாளில் அனைத்து மகளிர்க்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர், நேரு யுவகேந்திரா சார்பாக சமுதாயத்தில் மகளிர் நலன் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்பாக பங்காற்றிய தன்னார்வலர்களை பாராட்டி கேடயங்களையும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் சார்ந்த இளையோர் மன்றங்களுக்கு கேரம், வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணக்களையும் வழங்கினார்.

இவ்விழாவில், மதுரை மகளிர் திட்ட இணை இயக்குநர் எம்.காளிதாசன், நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 8 March 2022 12:30 PM GMT

Related News