/* */

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமி ரத்ன அங்கி சேவையில் எழுந்தருளல்..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமி ரத்ன அங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமி ரத்ன அங்கி சேவையில் எழுந்தருளல்..
X

வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி. பூதேவியுடன் எழுந்தருளினார்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள் உபயதாரர்களால் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்ற பின் தற்போது கட்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடை ஞாயிறு எனப்படும் மண்டை விளக்கு பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.

இதேபோல, உலகப்புகழ் பெற்ற அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் தாதாச்சாரியாரின் சாற்றுமுறை உற்வசவத்தையொட்டி, உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று அருள்பாலித்தார்.

பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ராஜகுரு தாத தேசிகன் சாற்று முறை உற்வசம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருநாள் உள்ளிட்ட இரு நாட்கள் மட்டும் ரத்ன அங்கியில் அலங்காரமாகி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

தாததேசிகன் உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமியும், பெருந்தேவித் தாயாரும் ரத்ன அங்கி அணிந்து இன்று திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்தில் மங்கள இசை வாத்தியங்களுடன் பவனி வந்து தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.

பெருமாளை ரத்ன அங்கியில் தரிசிப்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேசிகன் சந்நிதியில் தரிசன தாம்பூலம் மரியாதை செய்விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. பின்னர், உற்சவர் தேவராஜ சுவாமிக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் இரண்டு மணி நேரம் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் திருமஞ்சனத்தை கண்டனர்.

மாலையில் உற்சவர் தேவராஜசுவாமி கோயில் சந்நிதி தெருவில் உள்ள திருவடி கோயில் வரை வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்தார். பின்னர், ஆலயத்தின் நுழைவு வாயிலுக்கு வந்து பெருந்தேவித் தாயாருடன் இணைந்து கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. நிறைவாக பெருமாளும்,தாயாரும் அவரவர் சந்நிதிகளுக்கு எழுந்தருளினர்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தற்போது சபரிமலை யாத்திரை நடைபெற்று வருவதால் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அதிகாலை முதலே வரதராஜ பெருமாள் கோயில் வந்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று ரத்தினாங்கி சேவையில் எழுந்தருளியம் பெருமாளை கண்டதில் பெரு மகிழ்ச்சி அடைந்ததாக வெளிமாநில பக்தர்கள் தெரிவித்தனர். சாற்று முறை உற்சவத்தை ஒட்டி திருக்கோயிலில் தேசிகர் சன்னதியில் எழுந்தருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளை முறைப்படி வரவேற்று திருமஞ்சனம் செய்வது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Nov 2022 1:00 PM GMT

Related News