/* */

தருமபுரி பூ மார்கெட்டில், பூக்களின் விலை உச்சம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓணம், வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி, தருமபுரி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

தருமபுரி பூ மார்கெட்டில், பூக்களின் விலை உச்சம்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தர்மபுரி பஸ் நிலைய பூ மார்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7000 ஏக்கரில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு குண்டு மல்லி, ஊசிமல்லி, பட்டன் ரோஸ், கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு அறுவடை செய்யும் பூக்கள் அனைத்தும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மேலும் பூக்கள் ஓசூர், சென்னை, பெங்களூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தருமபுரி பூ மார்க்கெட்டில் தினசரி 10 டன் முதல் 20 டன் வரை பூக்களை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே பூ மார்க்கெட் சரியாக இயங்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பொதுமுடக்கம் முடிந்து பூ மார்க்கெட்டுகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் பூக்கள் விற்பனை என்பது மந்தமாகவே இருந்தது.

இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து நாளை முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான சுப நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரலட்சுமி பண்டிகை எதிரொலியால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து, கிலோ குண்டு மல்லி ரூ.160-லிருந்து 800-க்கும், ஊசி மல்லி ரூ.180லிருந்து 600-க்கும், கனகாம்பரம் ரூ.360லிருந்து 800 என உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் நந்தவட்டம் பூ ரூ.600, சாமந்தி ரூ.120, அரளி ரூ.240, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டு மல்லி ரூ.60, ஒரு கட்டு ரோஜா பூ ரூ.200, தாழம்பூ ரூ.200, சம்பங்கி ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் பூக்களை வாங்குவதற்கு ஆளில்லாமல் விலை குறைவாக விற்பனையானது. ஆனால் இன்று சுப முகூர்த்தம், ஓணம், வரலட்சுமி பண்டிகையை ஒட்டி, கடந்த வாரத்தை விட, பூக்களின் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பூக்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 19 Aug 2021 5:15 AM GMT

Related News