/* */

மகாவிஷ்ணு 4 அவதாரம் எடுத்த திருக்கோஷ்டியூர் கோயில் பற்றி தெரியுமா?

Thirukoshtiyur Temple History-தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலுள்ள கட்டடக் கலை அம்சங்கள் நம்மை வியக்க வைக்கும்.108 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருக்கோஷ்டியூர் கோயில் சிறப்புகள் பற்றி காண்போம்.

HIGHLIGHTS

Thirukoshtiyur Temple History
X

Thirukoshtiyur Temple History

Thirukoshtiyur Temple History

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் பள்ளி கொண்டநிலையில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதரருடன் (கோப்பு படம்)

தமிழகமானது புராதன கோயில்களின் கூடமாக விளங்கிவருகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதால் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இறைவனுக்கு திருப்பணி செய்யும் வகையில் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். அதில் ஒரு சில கோயில்கள் சிதிலமடைந்தாலும் பல கோயில்கள் இன்றளவில் புராதன சின்னமாக பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இக்கோயிலானது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். சுமார் 1000முதல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டகோயிலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. திருக்கோட்டியூர் என்பதே இவ்வூரின் புராதனப் பெயராக இன்றளவில் விளங்கி வருகிறது. பின்னர் மருவி இது திருக்கோஷ்டியூர் என மாறியது. திருக்கோஷ்டியூரானது சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாருக்கு அருகில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது.இக்கோயிலின் மூலவர் சவுமி நாராயணர் ஆவார். தாயார்திருமாமகள். இக்கோயிலின் தீர்த்தம் தேவபுஷ்கரிணி, மகாமகதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

108 திவ்ய தேசங்களில் ஒன்று

இக்கோயி்லானது வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதோடு, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பெரும்புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது. ராமானுஜர் ஆழ்வார் இக்கோயிலுக்கு வருகை தந்து ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக்கிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் பெயர் என்ன தெரியுமா? செளமிய நாராயண பெருமாள்.செளமிய நாராயணின் பெரிய திருவுருவச்சிலையானது 5 தலைகள் கொண்ட நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது.உலகத்தில் வாழும் மக்கள் யாவரும் நல்ல க்ஷேமத்துடன் வாழ ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தினை ராமானுஜர் இந்த திருத்தலத்தில் இருந்து உபதேசித்ததன் காரணமாக ஓம் திருமந்திரம் விளைந்த திருத்தலமாக இத்திருத்தலம் இன்றளவில் கருதப்படுகிறது.

தலவரலாறு: இரண்யன் எனும் அசுரனானவன் பிரம்மாவிடம் வரம் பெற்றவன். இவன் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்துள்ளான். பாதிப்படைந்த தேவர்கள் அனைவருமே மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களைக் காத்தருளும்படி வேண்டுகோள் விடுத்தனர். தேவர்கள் அனைவரையும் மகாவிஷ்ணு அழைத்து இரண்யனை வதம் செய்வது எப்படி ? என ஆலோசனை நடத்த திட்டமிட்டார். ஆனால் இரண்யனுக்கு பயந்த முனிவர்கள் அனைவருமே அவனுடைய தொந்தரவு இல்லாத இடத்தில் மகாவிஷ்ணு ஆலோசனை நடத்தவேண்டுமென வேண்டு கோள் வைத்தனர். அதற்கு சுவாமியும் சரி என சொன்னார்.

திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி கதம்ப மகிரிஷி தவமிருந்தார். தான் தவம் இருக்கும் இடத்தில் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என வரம்பெற்றிருந்தார். தேவர்களுடன் ஆலோசனை நடத்த இத்தலத்தினை மகாவிஷ்ணு தேர்வு செய்தார். இரண்யனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழிக்கப்போவதாக தெரிவித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சவுமிய நாராயணன் ஸ்ரீதேவி .பூதேவி சமேதரருடன் (கோப்பு படம்)

இதனைக் கேட்ட கதம்ப மகரிஷி, மற்றும் தேவர்கள் சுவாமியின் இந்த அவதாரத்தினை தாங்களும் காண வேண்டும் எங்களுக்கும் காட்டவேண்டும் என தெரிவித்தனர். அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவே இவர்களுக்கு நரசிம்ம அவதாரத்திருவுருவத்தினை மகாவிஷ்ணு காட்டியருளினார்.இதனால் மகிழ்ந்த தேவர்கள் மற்றும் கதம்ப மகரிஷி ஆகியோருக்குமேலும் சுவாமிகள் நின்ற, இருந்த, நடந்த, கிடந்த என 4 கோலத்தினையும் காட்டி அருள் புரிந்ததோடு இத்திருத்தலத்திலேயே எழுந்தருளினார். தேவர்களின்திருக்கை (துன்பம்)துடைத்த தலம் என்பதால் இத்திருத்தலம் திருக்கோட்டியூர் என்னும் பெயரினைப் பெற்று விளங்கியது.

இங்குள்ள பெருமாளுக்கு சவுமி நாராயணர் என்பது திருநாமம். இவர் பேரழகு கொண்டவர் என்பதால் இத்திருநாமம் அவருக்கு வந்தது. கோவில்களில் உற்சவர் விக்கிரகங்கள் அனைத்தும் வழக்கமாகவே பஞ்ச லோகத்தினால்தான் அமைப்பது வழக்கம். ஆனால் இத்திருத்தலத்தில் விக்ரகம் துாய்மையான வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது எனவும், அதனை தேவலோக இந்திரனே தந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. மகாவிஷ்ணு சுவாமிகள் இரண்யனை வதம் செய்யும் வரையில் இந்திரன் இத்திருத்தலத்தில் தங்கியதாகவும் அப்போது தான் பூஜித்த சவுமி நாராயணரை கதம்ப மகரிஷிக்கு கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கிறது. கோயில் உற்சவராக இருப்பது சவுமி நாரயணர் ஆவார். அவரது பெயரால்தான் இத்திருத்தலமும் அழைக்கப்படுகிறது.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணபெருமாள் கோவில் தெப்பத்திருவிழா துவக்க கொடியேற்றம் (கோப்புபடம்)

இத்திருத்தலத்தில் 5 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலமாக இத்திருத்தலம் கருதப்படுகிறது. அதாவது பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர் என்கிறது வரலாறு. மேலும் திருமங்கையாழ்வார் இப்பெருமாளை வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணன் என்று போற்றிப்புகழ்ந்ததாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவ தச்சனும், வடபகுதியினை மயன் என்ற அசுரத்தச்சனும் அமைத்துள்ளனர். இவ்விமானமானது மூன்று தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.அதாவது ஓம், நமோ, நாராயணாய என்ற மூன்று பதங்களை உணர்த்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானத்தில் முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமி நாராயணப் பெருமாளும், கீழ்த்தளத்தில் நர்த்தனகிருஷ்ணரும், மூன்றாவது அடுக்கில், பரமபதநாதரும், இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திரநாராயணர் என நான்கு நிலைகளில் இறைவன் அருள்கிறார். இத்திருத்தலத்தின் தாயர் திருமாமகளுக்கு கோயில் வளாகத்தில் தனியாக சன்னதிஉள்ளது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள், திருமாமகள் என்ற பெயர்களும்உ ண்டு.

இக்கோயிலின் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. மேலும் பிரகாரத்தில் நரசிம்மர் இரண்யணை வதம் செய்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானத்தில் வட பகுதியில் நரசிம்மரும், அவருக்கு அருகில் ராகு, கேது ஆகியோர் இருப்பது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியான தரிசனமாக உள்ளது.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தீர்த்தவாரி வைபவம் (கோப்பு படம்)

இக்கோயிலில் சவுமிய நாராயண பெருமாள் சுவாமியோடு ஸ்ரீதேவி, பூதேவி, மட்டும் இன்றி கைடபர், இந்திரன், மது,புருரூப சக்ரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியேர் உள்ளனர். மேலும் இக்கோயி்லில் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக இத்திருத்தலத்தில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார் . இவருக்குதான் பிரார்த்தனை கண்ணன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம்.

ஏங்க...பெருமாள் கோயிலினுள் சிவநந்தியும் இருப்பது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இக்கோவிலின் துவஜஸ்தம்பத்தினைப் பார்க்கும்போது அதற்கு பின்னால் நந்தி சிலை உள்ளதையும் காணமுடிகிறது. மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்ய கூட்டிய ஆலோசனைக்கூட்டத்தில் சிவனும் பங்கேற்றதன் சாட்சியாக இங்கு நந்தி சிலை அமைந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த லிங்கத்தினை சரபேஸ்வர லிங்கம் என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் இந்த லிங்கம் அருள்பாலிக்கிறது. இதற்கு முன்பாகவே சந்நதிக்குள் வேலுடன் காட்சி தரும் முருகன், மற்றும் சநகாதிமுனிவர்கள், நாகர் சிலைகள் ஆகியவை உள்ளன.

திருக்கோஷ்டியூர் திருத்தலத்திற்குள் நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் தனித்தனியாக சந்நதிகளில் காட்சி தருகின்றனர்.சக்கரத்தாழ்வார் சந்நதியும், அதற்கு பக்கத்தில் ருக்மணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணணோடு காட்சி தருகிறார். மதுரை மன்னன் ஸ்ரீ வல்லபனின் குரு செல்வநம்பிஎன்பவர். இவர் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவர் ஆகையால் வருடந்தோறும் இவ்வூரில் கிருஷ்ணனின் அவதார திருவிழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம். மேலும் இவர் ஒருமுறை பெரியாழ்வாரை இந்த விழாவிற்கு அழைத்திருந்தார்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் புனரமைக்கப்பட்ட திருத்தேர் (கோப்பு படம்)

பெரியாழ்வார் அவர் அழைப்பின் பேரில் நேரில் விஜயம் செய்தார். அப்போது அவர் அசந்து போனார் என்றுதான்சொல்லவேண்டும். பின்னர் "வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்" என்று பாடி சிறப்பித்தார். அவர் கண்டுகளித்த காட்சிகளில் ஒன்றுதான் (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம்.

இக்கோயிலின் சில படிகள் ஏறிச்சென்றால் அங்கே பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்தில் காட்சியளிக்கிறார். பெருமாளின் கருவறைக்குள் ஸ்ரீதேவி, பூதேவி, பிரதானமாக அங்கம் வகிக்கின்றனர். பிரம்மா அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி ஆகிய மூவருடன் காட்சி தருவது சிறப்பிலும் சிறப்பாக அமைந்துள்ளது. இம்மூவரும் வீணை வாசித்து திருமாலை மகிழ்விப்பதோடு, பெருமாள் உறையக் காரணமான கதம்ப மகிரிஷியும் உடன்இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஸ்தித நாராயணன்

திருக்கோஷ்டியூர் கோயில் கருவறைக்குள் வீற்றிருக்கும் பெருமாளின் திருவடி அருகே மது, கைடபர் அரக்கர்கள் , தேவேந்திரன், காசி மகாராஜா ஆகியோரும். மற்றும் சந்திரனின் பேரப்பிள்ளையான அதாவது புதனின் மகனான புரூரவ சக்ரவர்த்தி என்று ஒரு பெருமாள் பக்தர்களின் கூட்டமே உள்ளது. மேலும் இவ்வாறு தேவர்களின் நடுவே நாராயணன் தோன்றியமையால் ஸ்தித நாராயணன் என்றும் பெயர் கொள்கிறார்.

பாம்பு மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானத்தின் பெயர்தான் அஷ்டக விமானம் ஆகும். மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும், திருக்கோஷ்டியூரிலுள்ள இத்திருத்தலமும் 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மட்டுந்தான் இதுபோன்ற அஷ்டக விமானத்தினைக் காணமுடியும். மேலும் பாற்கடல் போல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார் மகாவிஷ்ணு.

இக்கோயிலின் விமான இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவீற்றிருக்கும் தளத்திற்கு செல்லகுறுகலான மேலே ஏறும் படிகள் உள்ளது.

இக்கோயிலின் கோபுரத்தின் மீதிருந்துதான் ராமானுஜர் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தினையும் அதன் விளக்கத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய பலன்களையும், அறிவித்தார். இதனால் ஊரைப்பார்த்தவாறு அவரது திருவுருவச்சிலை ஒன்று உள்ளது. கோயிலின் உச்சியில் இருந்து பார்த்தால் ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த வீடுகளைக் காணமுடியும். இந்த வீட்டினை கல் திருமாளிகை என அழைக்கின்றனர். நம்பியின் வம்சா வழியினர் இன்று கூட இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர் என்பது இதன் சிறப்பு . கீழே இறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யும் பாக்கியம் பெறலாம்.

புதனின் மகனாக கருதப்படும் புருரூப சக்ரவர்த்தியானவர் இத்திருத்தலத்தில் திருப்பணிகள் மேற்கொண்டார். மகாமக பண்டிகையின்போது பெருமாளைத் தரிசிக்க எண்ணினார். இவருடைய விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் பெருமாள் இத்திருத்தலத்தில் ஈசான்ய திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதிபொங்க சிறப்பு காட்சியளித்தார். இந்த கிணறானது மகாமக கிணறு என அழைக்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக விழாவின்போது சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீ்ர்த்தவாரி செய்கிறார்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தெப்பத்திருவிழா (கோப்புபடம்)

மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் தெப்பத்திருவிழாவும், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி திருவிழாக்கள் காலத்தில் இத்திருத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஒரு அகல் விளக்கினை வாங்கி சுவாமி சந்நதியில் வைத்து பின் வீட்டிற்கும் எடுத்துசென்றுவிடுகின்றனர். பின்னர் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து ஒருசிறுபெட்டியில் இதனை வைத்து மூடி பூஜையறைக்குள் வைத்துவிடுகின்றனர்.

இதில் பெருமாள் லட்சுமி எழுந்தருளியுள்ளதாக நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். தான் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறிவிட்டால் அடுத்த மாசி தெப்பத் திருவிழாவின் போது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட விளக்குடன் மற்றொரு நெய் விளக்கையும் சேர்த்துவைத்து தீர்த்த கரையில் வழிபடுகின்றனர். புதியதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கினை எடுத்து செல்கின்றனர்.

இத்திருத்தலம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 March 2024 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்