/* */

பழமொழி, பொன்மொழி அப்படின்னா என்ன?

Ponmoli in Tamil-நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நமது முன்னோர்களின் அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் பழமொழி, பொன்மொழி வாயிலாக கூறப்பட்டுள்ளது

HIGHLIGHTS

Ponmoli in Tamil
X

Ponmoli in Tamil

Ponmoli in Tamil-மனிதனாகப் பிறந்த நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றி யாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே அனைத்து உயிர்களும் படைக்கப்பட்டுள்ளன. எனக்கு அடுத்தவர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் மற்றவர் உதவி மனிதனுக்கு தேவைப்படும்.

இது போன்ற உதவிகளை உபகாரம், தர்மம், எனவும் நன்றி, அறம் என்றும் குறிப்பிடுவர். மனிதன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டும். இதனை வலியுறுத்த நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றினைக் கூறியுள்ளனர். அந்த பழமொழிகள் நமக்கு வாழ்க்கை பாடத்தை நன்கு உணர்த்தும் வகையில் இருப்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்

தனக்கு மட்டும் பிறர் உதவி செய்ய வேண்டும். ஆனால் தான்ன் யாருக்கும் உதவி செய்யமாட்டேன் என்று சிலர் இருப்பர். அவ்வாறு இருப்பது கீழ்த்தரமான செயலாகும். நாம் உதவினால் மட்டுமே மற்றவரும் நமக்கு உதவி செய்வர். இதனை உணர்த்தும் வகையில் தான் ''முன்கை நீண்டாத்தானே முழங்கை நீளும்'' என்று என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

முன்னங்கை நீளும் போது முழங்கை நீளும். அப்போதுதான் முழுமையான கையும் நீண்டு வேலை செய்யும். கையை நீட்டாது அப்படியே வைத்திருந்தால் வாத நோய் வந்தவைரைப் போன்று இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இங்கு முன்னங்கை, முழங்கை என்பது உதவுதலைக் குறிக்கும். முன்னங்கை என்பது நாம். முழங்கை என்பது பிறர். நாம் உதவினால் மட்டுமே பிறர் நமக்கு உதவி செய்வார் என்பதையே இப்பழமொழி சுட்டுகிறது.

செய்த உதவி வீணாகாது

நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். அதனால் நாம் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.

அதை உணர்த்தும் விதமாக ''செய்த உதவியும் நட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது'' என்ற முதுமொழி நமக்கு எடுத்துரைக்கிறது.

மண்ணில் இட்ட விதை எவ்வாறு தப்பாது முளைக்குமோ அது போன்று நாம் செய்த உதவி ஒருபோதும் வீணாகாது. இதனை உணர்ந்து நாம் யாருக்காவது உதவுதல் வேண்டும். உதவி செய்வதைக் கைவிட்டுவிடுதல் கூடாது

பலன் கிடைத்தாலும், கிடைக்காதிருந்தாலும் நாம் பிறருக்கு எவ்வகையிலாவது உதவுதல் வேண்டும். வாழ்வியள் அறத்தையும் இந்த பழமொழி வலியுறுத்துகின்றது.

செய்த உதவி தலைகாக்கும்

செய்த உதவி ஒருவரின் குடும்பத்தையும், உயிரையும் காக்கும். மகாபாரதத்தில் 18-ஆம் நாள் போரில் கர்ணனும், அர்ச்சுனனும் நேரிடையாகப் மோதுகின்றனர். கர்ணனும், அர்ச்சுனனம் பல்வேறு ஆயுதங்கைளக் கொண்டு போர்புரிகின்றனர்.

போர் உச்சநிலையை அடைகிறது. பலரின் சாபங்களாலும், தெய்வத்தாலும் கைவிடப்பட்ட கர்ணனை அர்ச்சுனன் வீழ்த்துகிறான். கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிழக்கிறான். அர்ச்சுனனால் முழுமையாகக் கர்ணனை அழிக்க முடியவில்லை. ஏனெனில் கர்ணன் செய்த தர்மம்(உதவி) அவனது உயிரைப் பாதுகாக்கின்றது. தன்னால் கர்ணனை முழுமையாக அழிக்க முடியவில்லையே அதற்கு என்ன காரணம் என்று அர்ச்சுனன் கண்ணனிடம் வினவ, கண்ணனோ,

''அர்ச்சுனா, கர்ணன் செய்த உதவியே அவனது உயிர் போகாமல் காத்து நிற்கின்றது. அதனால் தான் உன்னால் அவனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. உலகில் அவனைப் போன்று உதவியளிப்பதில் சிறந்தவர் யாருமில்லை. நான் சென்று அவனைக் காத்து நிற்கும் தர்மத்தினால் ஏற்பட்ட புண்ணியத்தைப் பெற்று வருகிறேன். அதன்பின் அவன் இறந்து விடுவான்'' என்று கூறி அந்தணர் வடிவில் சென்று கர்ணனிடம் யாசித்து அவன் உதவி செய்ததால் ஏற்பட்ட புண்ணியத்தைப்(நன்மை) பெற்று அவனுக்கு வரமளித்து மீள்கிறான்.

கர்ணன் உயிர் துறக்கிறான். அதனால் ஒருவர் செய்த தர்மம் அவருக்கோ அல்லது அவரது சந்ததியினருக்கோ உறுதுணையாக அமையும். பிறர்க்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற கருத்தினை, ''தர்மம் தலைகாக்கும்'' என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கர்ணன் செய்த தர்மமே இறுதிவரை அவனது உயிரைக் காத்து நின்றது அவன் செய்த தர்மமே அவனது யெரைக் காலம் உள்ளளவும் மக்களின் மனதில் இடம்பெறச் செய்து கொண்டிருக்கின்றது. எனவே நம்மாலான உதவிகளைப் பிறர்க்குச் செய்தல் வேண்டும் என்ற அறச் சிந்தனையை இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது.

செய்த உதவியைக் கூறாதே

நாம் ஒருவருக்குச் செய்த உதவியை மறந்து விடவேண்டும். அதனை எலலோரிடமும் கூறித் தற்பெருமை அடித்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு கூறினால் அவ்வுதவி கீழ்த்தரமானதாக ஆகிவிடும். இதனை,

''இடது கை செய்சது வலது கை அறியக் கூடாது'' என்ற பழமொழி எடுத்துரைக்கின்றன.

இடது கை- வலதுகை இரண்டும் அடுத்து அடுத்து உள்ள. அதுபோன்று நாம் செய்த உதவியைப் பிறர் அறியுமாறு சொல்லுதல் கூடாது. அதுவே சிறந்தது. உயர்வானதும் ஆகும். உடம்பில் உள்ள கைகளே அறியக் கூடாது எனும்போது பிற மனிதர்கள் அறியலாமா? பிறர் அறியாமல் இருப்பதே சாலச்சிறந்தது என்ற பண்பினை இப்பழமொழி உணர்த்துகிறது.

சிலர் எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் பிறர்க்கு உதவி செய்ய மாட்டார்கள். தாம் உதவக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், உதவி செய்தாலும் எதுவும் குறையாது எனும் நிலையிலும் கூட ஒரு சிலர் உதவ முன்வர மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை ''எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டமாட்டான்'' என்ற மேற்கோள் படம்பிடித்துக் காட்டுகிறது. உணவு உண்பவன், காகம் வர, அதனை விரட்ட உண்ட கைகளைப் பயன்படுத்தினால் கையில் ஒட்டியிருக்கும் சோறு கீழே உதிர்ந்து விடுமே என்று கருதி விரட்ட மாட்டான். அத்தகைய ஈயாத பண்புள்ளவனையே மேற்குறித்த தொடர் தெளிவுறுத்துகிறது.

இப்படிப்பட்டவர்கள் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும். பிறருக்கு எள்ளளவும் கொடுக்கக் கூடாது என்று நினைப்பர். இவர்களை 'உலோபி' என்று குறிப்பிடுவர். இவர்கள் இறுதியில் இழிவாகவே இறப்பர் என்பதனை, ''தானாய்த் தின்னு வீணாய்ப் போகாதே'' என்ற பழமொழி அறிவுறுத்துகின்றது.

இதையே தான் திருவள்ளுவரும்

''தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு''

என்ற குறளில் கூறியுள்ளார்.

உதவுபவனைத் தடுத்தல்

ஒருபோதும் ஒருவர் மற்றவருக்கு உதவுவதைத் தடுத்தல் கூடாது. அது ஒரு பாவச் செயலாகும். தானும் கொடாது, பிறரையும் கொடுக்க விடாது இருப்பது தவறான ஒன்றாகும். சிலர் இதை வேண்டுமென்றே செய்வர். இவ்வாறு செய்தால் இவர்கள் கீழான நிலையினை அடைவர். கொடுப்பதைத் தடுப்பவர் அடையும் நிலையை வள்ளுவர்,

''கொடுப்பது அழுக்க றுப்பான் சுற்றம்

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்''

என்று கூறுகிறார்.

இதையே தான் ''தானும் செய்யமாட்டான் செய்றவனையும் விடமாட்டான்'' என்ற பழமொழி வழிமொழிகிறது

தானும் உதவாது பிறரையும் உதவவிடாது இருப்பது கேட்டினைத் தரும். அதுபோன்று ஒருவருக்குக் கொடுக்கும் கூலியையும் தடுத்து நிறுத்தக் கூடாது. அங்ஙனம் செய்வது உழைப்பவனின் வயிற்றில் அடிப்பதைப் போன்றதாகும். ஒருபோதும் அத்தகைய இழி செயலை ஒருவர் செய்யக் கூடாது என்பதை, ''கொடுக்கிற கூலிக்குக் குறுக்கே நிற்காதே'' என்ற பழமொழி வலியுறுத்துகிறது.

உழைப்பிற்கேற்ற நியாயமான கூலியை வழங்குதல் வேண்டும். அதோடு மட்டுமல்லாது அவ்வாறு கூலி கொடுப்பதையும் தடுத்து நிறுத்துதல் கூடாது. அது மனித உரிமை மீறலாகும்

நியாயமான நேர்மையான உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவது உழைப்பவருடைய உரிமையாகும். ஆனால் அதனைக் கொடுக்க விடாது தடுப்பது மனித உரிமை மீறலான செயலாகும் என்ற அரிய உண்மையையும் மனித உரிமை மீறலுக்குரிய அறைகூவலாகவும் இது அமைந்துள்ளது.

உதவி –உபத்திரவம்

சிலர் உதவி செய்வர். சிலர் உதவி செய்யாமல் இருப்பர். இன்னும் சிலர் உதவாவிட்டாலும் பிறர்க்குக் கெடுதல் செய்வர். இத்தகையோர் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவர் ஆவார். இத்தகைய கொடிய பண்பினை ஒருவர் கைவிட வேண்டும் என்பதை குறிக்க

''உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாதே''

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இங்கு உபத்திரவம் என்பது துன்புறுத்துதல், தீமை செய்தல் எனும் பொருளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லது ஒருவருக்குச் செய்யவில்லை என்றாலும் தீமையைச் செய்தல் கூடாது என இப்பழமெழி வலியுறுத்துகிறது. இதைத்தான் புறநானூற்றில்,

''நல்லது செய்தல் ஆற்றீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லாரும் உவப்பது'' (புறம்.,195)

என்ற பாடல்வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உதவி செய்பவர் – உதவி பெறுபவர்

யாருக்கு உதவுகிறோம் என்பதைப் பொறுத்தே உதவியானது மதிப்புப் பெறுகிறது. உதவி செய்பவர் தான் உதவி செய்யப் போகும் நபர் அதற்கு உகந்தவரா? அதனால் உதவி பெறுபவர் துன்பம் குறையுமா? என்பதையெல்லாம் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

இதனை,''பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு'' என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

உலகில் பிறந்தது உதவுவதற்கே என்பதை அறிந்து நாம் வாழ வேண்டம். உழைத்துச் சேர்ப்பது துன்பத்தில் உழல்பவரின் துன்பத்தைத் துடைப்பதற்கே என்பதை அறிந்து பிறரருக்கு உதவி செய்து அவர்களையும் மகிழ வைத்து நாமும் இன்புற்று வாழ்வோம்.

அவ்வாறு வாழ்வதே உன்னதமான உயர்ந்த வாழ்க்கை ஆகும். அத்தகைய உயர் வாழ்வை வாழ அனைவரும் முயல்வோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!