/* */

தென்னக இருதய மையத்தில் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை

தென்னக இருதய மையத்தில் இருதய செயல்பாட்டை சீரமைக்கும் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்னக இருதய மையத்தில் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை
X

செய்தியாளர்களை சந்தித்த தென்னக இருதய மையத்தின் இதய நோய் மருத்துவர் ஸ்ரீநிவாசன்.

திருநெல்வேலியிலேயே முதல்முறையாக தென்னக இருதய மையத்தில் இதயநோய் மருத்துவர், Dr. R.ஸ்ரீநிவாசன் - 65 வயதுடைய பெண்ணிற்கு நவீன வகை இதய செயல்பாட்டை சீரமைக்கும் கருவி (பேஸ்மேக்கர்) LOT CRT (Left Bundle Optimized Cardiac Resynchronization Therapy) பொருத்தப்பட்டது.

மனிதனின் இதயமானது வலது ஆரிக்கிள், வலது வென்டிரிக்கிள், இடது ஆரிக்கிள் மற்றும் இடது வென்டிரிக்கிள் என நான்கு அறைகளை கொண்டது. பொதுவாக இதயமானது மிகவும் குறைவாக துடிக்கும் போது, குறிப்பாக ஒருநிமிடத்திற்கு 40 க்கும் குறைவாக துடிப்பது முழு இதய அடைப்பு என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் பேஸ்மேக்கரின் லீடுடன் வலது வென்டிரிக்கிளில் (ஒற்றை அறை பேஸ்மேக்கர்), வலது வென்டிரிக்கிள் மற்றும் வலது ஏட்ரியத்தில் (இரட்டை அறை பேஸ்மேக்கர்) பொருத்தப்படும்.

ஆனால் இந்த வகை பேஸ்மேக்கர்கள் பொருத்தும் போது அதனால் ஏற்படும் மின் தூண்டல்கள் பின்னோக்கி (எதிர் திசையில்) செல்வது போன்ற குறைபாடுகள் உள்ளன. மேலும், ஒற்றை அறை (Single Chamber) பேஸ்மேக்கரானது ஏட்ரியத்தின் செயல்பாட்டுடன் ஒத்திசைவுடன் செயல்படாது. இரட்டை அறை (Dual Chamber) பேஸ்மேக்கரில் வலது மற்றும் இடது வென்டிரிக்கிள்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக செயல்படாது. இந்த விஷயங்கள் நீண்ட கால செயல் திட்டத்தில் இதய செயல்பாட்டை மோசமாக்கலாம். எனவே, ஏற்கனவே இதயம் செயலிழந்த நோயாளிகளுக்கு இந்தவகை பேஸ்மேக்கர் பொருத்தக்கூடாது. இதனை சரிசெய்யும் வகையில், சமீபத்தில் நவீன முறையில் இதய செயல்பாட்டை துரிதப்படுத்தும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வலது வென்டிரிக்கிள் லீடானது இடது பக்க கிளைகளுடன் கொத்தாக இணைத்து திருகப்படும். இடது பக்க கிளையானது இதய செயல்பாட்டை கடத்தும் அமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, இது கடத்தலை துரிதப்படுத்தும் அமைப்பு (Conduction System Pacing) எனப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், மின் தூண்டுதல் இயல்பான திசையில் செல்வதால் இதய செயல்பாடானது நீண்ட காலத்திற்கு மோசமடையாமல் இருப்பதுடன் இதய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

இதய மறு ஒத்திசைவு பேஸ்மேக்கர் (CRT) என்பது மூன்றாவதாக ஒரு லீடானது இடது வென்டிரிக்கிளை தூண்டுவதற்காக இடது வென்டிரிக்கிளில் பொருத்தப்படும் ஒரு சிறப்பு வகை கருவியாகும். இந்த சிறப்புமிக்க பேஸ்மேக்கரானது இரட்டை வென்டிரிக்குலார் துரிதப்படுத்தும் கருவி (BiV) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏட்ரியம், வலது மற்றும் இடது வென்டிரிக்கிளை ஒத்திசைவுடன் வைத்திருப்பதன் மூலம் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இரட்டை வென்டிரிக்குலார் துரிதப்படுத்தும் சிகிச்சையுடன் இடதுபக்க கிளைகளை துரிதப்படுத்தும் சிகிச்சையை சேர்த்து மேம்படுத்தப்பட்ட சிகிச்சையாக அளிக்கும் போது, இதயத்தின் நான்கு அறைகளும் ஒத்திசைவோடு செயல்பட்டு மின் தூண்டல்கள் சரியான திசையில் கடத்தப்படுகின்றன. இதனால் இதயமானது இயல்பான செயல்பாட்டிற்கு செல்கிறது.

தென்னக இருதய மையத்தின் இதய நோய் மருத்துவர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

இந்த மேம்படுத்தப்பட்ட சிகிச்சையானது (LOT CRT) திருநெல்வேலியிலேயே முதல்முறையாக 65 வயது பெண்ணிற்கு அளிக்கப்பட்டது. அந்த பெண் ஒரு வருடத்திற்கு முன் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவருடைய இதய செயல்பாடானது 40 சதவீத அளவே இருந்தது. இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் அவருக்கு முழுமையான இதய அடைப்பிற்கான அறிகுறிகள் இருந்தது. மேலும், அவரின் இதய துடிப்பானது நிமிடத்திற்கு 36 என்ற அளவில் இருந்தது. அவருக்கு தற்காலிக பேஸ்மேக்கர் பொருத்துவதற்கு முன்பு இதயம் செயல்படுவது நின்று விட்டது. அவர் 5 நாட்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்ட பிறகு, நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு குறைவான இதய செயல்பாடு இருந்த காரணத்தால் அதனை துரிதப்படுத்த LOT CRT கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மேலும் பலவகையான பேஸ்மேக்கர்கள் வெவ்வேறு செயல்திறனுடன் கூடிய வகையில் கிடைப்பதாகவும், நோயாளியின் உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், நீண்டகால செயல்திறனுக்கு பொருத்தமான சரியான பேஸ்மேக்கரை பொருத்த வேண்டும் என்றும் கூறினார்.

பேட்டியின்போது, மருத்துவமனை நிர்வாக அலுவலர் சரவணன், மக்கள் தொடர்பு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 July 2022 1:50 PM GMT

Related News