/* */

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி .

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்ச்சி .
X

திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் கோயில்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, 5.30 மணிக்கு விஸ்வரூபமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர், திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர், மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு, மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

தூத்துக்குடி சிவன் கோயில்:


தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பாகம் பிரியாள் உடலுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றபட்டது. சுவாமி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள், ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி எழுந்தருளினார். அதன்பிறகு, கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில்:

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு திறக்கப்பட்டது. காலை 4:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடைபெற்றது.

காலை 5:30 மணிக்கு பரணிதீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மேல் மகா தீபம் (சொக்கப்பனை) ஏற்றுதல் நடைபெற்றது. பின்னர், ரிஷப வாகனத்தில் கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2022 4:14 AM GMT

Related News