/* */

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
X

தூத்துக்குடி அனல் மின் நிலையம். (கோப்பு படம்).

தூத்துக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் அருகே அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டது. மொத்தம் 5 யூனிட்கள் உள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து யூனிட்டுகளும் செயலபடத் தொடங்கி 30 ஆண்டுகளை கடந்துவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்படுவது உண்டு. மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும், கொதிகலன் பழுது, பாரமரிப்பு பணிகள் காரணமாகவும் அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று இரவு 3 ஆவது யூனிட்டில் கொதிகலன் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த யூனிட்டில் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின்நிலைய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ஏற்கெனவே 5 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 ஆவது 2 ஆவது மற்றும் 4 ஆவது யூனிட்டுகளில் மட்டுமே தற்போது மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 630 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்ற போதிலும் தற்போது 550 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தொடர் பழுது, பராமரிப்பு பணிகள், கொதிகலனில் திடீர் பழுது காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 31 May 2023 6:32 AM GMT

Related News