/* */

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் 2 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை

பெண்ணை தாக்கிய வழக்கில்2 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் 2 போலீஸ்  அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
X

பாதிக்கப்பட்ட பெண் பாப்பா.

காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை துன்புறுத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், நாடு முழுவதும் ஆங்காங்கே காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் உயிரிழந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினையில் உச்சகட்டமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த தந்தை-மகன் இறப்பு சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக குரல் ஒலித்தது.

இதுபோன்ற சம்பவங்கள் ஒருபுறமிருக்க காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோர் துன்புறுத்தப்படுவதாக எழும் புகார்கள் தொடர்பான வழக்குகளில் உரிய நியாயத்தை அவ்வப்போது நீதிமன்றம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காவல் அதிகாரிகள் துன்புறுத்தியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விவரம் குறித்து வழக்கறிஞர் அதிசயகுமார் கூறியது வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பா. 49 வயது விதவைப் பெண்ணான பாப்பா மீது திருட்டு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல் காந்த் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் பாப்பாவின் வீட்டுக்குள் புகுந்து சேதப்படுத்தியவுடன் அவர் மீது தாக்குதல் நடத்தி காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாப்பாவுக்கு கை உடைபட்டு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் வழக்கை பாப்பா தொடர்ந்தார்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளர் விமல் காந்த் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் என வழக்கறிஞர் அதிசயகுமார் தெரிவித்தார்.

தண்டனை வழங்கப்பட்டுள்ள விமல் காந்த் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அப்போதைய காவல் உதவி ஆய்வாளரான காந்திமதி தற்போது ஆய்வாளராக நாகர்கோவிலில் பணிபுரிந்து வருகிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 29 Oct 2022 4:57 AM GMT

Related News