/* */

விஷமப் பிரச்சாரங்களை பரப்பும் விஷமிகளோடு என்ன பேச்சு வார்த்தை -குமுறும் விவசாயிகள்..!

மத்திய அரசையும், தமிழக அரசையும், தமிழக விவசாயிகளையும் மதிக்காத கேரள விஷமிகள் நடத்திய மாநாட்டில் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஏன் பங்கேற்றனர் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

விஷமப் பிரச்சாரங்களை பரப்பும்  விஷமிகளோடு என்ன பேச்சு வார்த்தை -குமுறும் விவசாயிகள்..!
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

மத்திய அரசையும், தமிழக அரசையும், தமிழக விவசாயிகளையும் மதிக்காத கேரள விஷமிகள் நடத்திய மாநாட்டில் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஏன் பங்கேற்றனர் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

கேரளாவிலுள்ள ஆலுவா நகரத்தில் Geological Society Of India, Indian Peninsular River Basin Council,,, All Kerala river production council,,, Tamilnadu rivers retrieval movement,,, Exnora international என்ற அமைப்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச நீர் ஆதார பகிர்வு குறித்த மாநாட்டை நடத்தியிருக்கின்றனர். மலையாளிகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு, ஐ.நா வின் சுற்றுச்சூழல் அமைப்பான யுனெஸ்கோ மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவித்த பின்னர் தான், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் விழித்துக்கொண்டது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில், 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்து கிடக்கும் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களையும் ஆய்வு செய்யப் பணித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் ஆய்வு மேற்கொண்ட மாதவ் காட்கில் தலைமையிலான குழு, ஆகஸ்ட் 31, 2011 ஆம் ஆண்டு தனது அறிக்கையை மத்திய வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனிடம் சமர்ப்பித்தது. மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த இந்த கமிட்டியின் அறிக்கையை, மறுபரிசீலனை செய்ய வேண்டும், அறிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேரளாவும், கர்நாடகாவும் போர்க்கொடி உயர்த்தினர்.

வேறு வழியின்றி மத்திய அரசும் இஸ்ரோவின் சேர்மனாக இருந்த மலையாளியான கஸ்தூரிரங்கன் தலைமையில் மறுபடியும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஆய்வு செய்யப் பணித்தது. கூடுதலாக பேராசிரியர் மாதவ் காட்கில் அளித்த அறிக்கையையும் மறுசீராய்வுக்கு உட்படுத்தியது இந்த கமிட்டி. இந்தக் கமிட்டிக்கும் எதிராக தமிழகம் எவ்வித எதிர்ப்பு குரலும் எழுப்பாத நிலையில், கேரளா மட்டும் தொடர்ந்து அதற்கு எதிராக போராடியது.

ஹைரேஞ்ச சம்ரக்ஷ்ண சமிதி என்ற அமைப்பு உருவாக்கி இரண்டு கமிட்டி அறிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்த வேலை நிறுத்தத்திற்கு அங்கிருந்த அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தனர்.

போராட்டம் நடத்திய ஹைரேஞ்ச் சம்ரக்ஷன சமிதியைச் சார்ந்த வழக்கறிஞர் ஜோயிஸ் ஜார்ஜ், கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடுக்கி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தான் வெற்றிபெற்றால் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவேன், காட்கில் கமிட்டி அறிக்கை மற்றும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகளை அமல்படுத்த விடமாட்டேன் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றியும் பெற்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்கு எதிராக களத்தில் நின்ற இந்த ஜோயிஸ் ஜார்ஜுக்கு, பினராயி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவளித்து அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. ஆக மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கு எதிராக களத்தில் நின்றது சமிதி மட்டுமல்ல கேரளத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் தான்.

இதைத்தொடர்ந்து இந்த இரண்டு கமிட்டி அறிக்கைகளையும் அமல்படுத்துவதில் தீவிரமாக இருந்த, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயந்தி நடராஜனை வீட்டுக்கு அனுப்பினர். அதே துறைக்கு கேபினட் அமைச்சராக வந்த கர்நாடகத்தை சேர்ந்த ஜெயராம் ரமேஷ், இந்த அறிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த லட்சணத்தில் இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கப் போகிறோம் என்று அமர்வுகளை கேரளாவில் நடத்துவது வெட்கக்கேடான விஷயம். இந்த நிகழ்வில் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றது பெரும் வேதனையான விஷயம். இவர்கள் கேரளாவில் எந்த ஊரில் எத்தனை கருத்தரங்கங்கள் நடத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட தமிழகத்திற்கு எடுத்துவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் எத்தனை பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும்,கேரளாவிடம் தண்ணீர் வாங்குவது மட்டும் நடக்காத ஒன்று. இந்த நிலையில் நிகழ்ச்சிநிரலில் எதிலும் இல்லாத எர்ணாகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசல் ஜோய், அமர்வில் கலந்து கொண்டதாகவும், அங்கிருக்கும் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் சிலரை சந்தித்து, ஒரு அமர்வை தனியே நடத்தியதாகவும், ஒரு வீடியோ வெளியிட்டு, முல்லை பெரியாறு அணை குறித்து தமிழக தலைவர்களோடு ஒரு பேச்சுவார்த்தை என்கிற தலைப்பில் தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் பதிவைப் பார்த்ததும் மனவேதனை தொற்றிக்கொண்டது. 2018-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் விஷமப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கும் ரசல் ஜோயோடு, என்ன பேச்சு வார்த்தை வேண்டிக் கிடக்கிறது. காவிரிக்கு எதிராக கர்நாடகாவில் ஒரு வாட்டாள் நாகராஜ் என்றால் கேரளாவில் முல்லை பெரியாறுக்கு எதிராக ஒரு ரசல் ஜோய்.

அந்த நபரோடு ஒரு அமர்வில் அமர வேண்டிய தேவை வந்தால், அந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் எவரையாவது ஒருவரை அழைத்து கருத்து கேட்டிருக்கலாம். அதை விடுத்து அந்த கேரள நபரை ஏதோ தேவதூதனை போலவும், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் எல்லாம் அந்த தேவதூதனுடைய வார்த்தைகளை கேட்க போனவர்கள் போலவும் அந்த அமர்வில் அமர்ந்திருக்கும் வீடியோ, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

மறுபடியும் சொல்கிறோம் இந்த ரசல் ஜோய் எதற்கும் லாயக்கற்ற ஒரு நபர். அவரைப் பின்தொடர்வது முல்லைப் பெரியாறு பாசனத்தை நம்பி இருக்கும் 10 லட்சம் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் ஆகும். தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மீண்டும் இது போன்ற ஒரு தவறை செய்து விடவே கூடாது. இவ்வாறு கூறினார்.

Updated On: 21 May 2022 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  7. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  8. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  9. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  10. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...