/* */

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,94,204 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை பெறுவதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்களால் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது. கூட்ட நெரிசல் தவிர்ப்பதற்காக டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரங்களில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் அனைத்து நபர்களுக்கும் சென்றடையும் வகையில் இதனை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டும் அவர்களின் கீழ் இதற்கான குழு அமைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 643 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்களை வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இன்று காலை பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது.

காஞ்சிபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியான 39 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 643 கடைகளிலும் பொருட்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு , காஞ்சி வட்ட வழங்க அலுவலர் வாசுதேவன், 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பழகன் , கூட்டுறவு துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொது மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் , இது தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து தீவிரமாக கண்காணிக்க இரண்டு வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து நியாயவிலை கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2023 7:57 AM GMT

Related News