/* */

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறையணுமா..? கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்க..!

Kanagathara Sothiram Tamil-சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர், வாரஸ்ரீ.

HIGHLIGHTS

Kanagathara Sothiram Tamil
X

Kanagathara Sothiram Tamil

Kanagathara Sothiram Tamil-ஆதிசங்கரர் அருளிய இந்த கனகதாரா ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். தமிழில் மொழிபெயர்த்த வாரஸ்ரீ-ன் வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற

பொன்னிறக் கருவண்டுபோல்

மாதவன் மார்பினில் வாசம்பு ரிந்தங்கு

மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்

பரவும்பல் வடிவத்தின் செல்வவள மாகிடும்

திருமகளின் அழகுவிழிகள்

பரிவோடு தந்தஇரு விழிகளின் கடைநோக்கு

மங்களமெ னக்கருள்கவே (1)

பொருள் :

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, ஆனந்தத்தையே ஆபரணமாய் அணிந்திருக்கும் திருமாலின் திருமார்பில் அக மகிழ்ந்து மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் அனைத்து மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து

உலவிடும் பெண்வண்டுபோல்

நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற

ஆசையால் மேல்சுழன்று

கோலங்கண் டுஉடன் நாணமேற மீண்டும்

கீழ்வந்து மேல்சென்றிடும்

குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில்

செல்வமெல் லாம்தருகவே (2)

பொருள் :

பாற்கடலில் உதித்த ஸ்ரீ லட்சுமி தேவி திருமாலின் திருமுகத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளை நினைவு படுத்துகின்றது. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை தரிசிக்க ஸ்ரீ தேவியின் கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கம் காரணமாக திரும்புவதுமாக இருக்கின்றன. அருள் நிறைந்த அவள், தனது கடைக்கண் பார்வையால் என்னையும் பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய

முகுந்தனைக் காணும்விழிகள்

ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது

இனிமையை வார்க்கும்விழிகள்

மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்

பள்ளிகொள் ளும்பரமனின்

மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்

செல்வசுகம் யாவுமருள்க (3)

பொருள் :

ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போதும் யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவை இமையாது நோக்கும் தாயே ! உனது கரு விழியின் ஒளி மிகுந்த கடைக்கண் அருட் பார்வை என் மீது விழுந்து சதா சர்வ காலமும் எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப

மார்பினில் வாழ்கின்றதோ

எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச்

சரமாய் ஒளிர்கின்றதோ

எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின்

தேவைகளைத் தருகின்றதோ

அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள்

மங்களமெ னக்கருள்கவே (4)

பொருள் :

ஸ்ரீ மகா விஷ்னுவின் திருமார்பில் திகழ்கின்ற மாலை உன் பார்வை பட்டு இந்திர நீல நிறமாக காட்சி அளிக்கும். அத்தகைய ஒளி நிறைந்த உன் கடைக்கண் பார்வை என் மேல் பட்டு எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும்

விஷ்ணுவின் திருமார்பினில்

நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலா கிஅகில

உலகுக்கும் தாயுமாகி

பார்கவ குலத்தினில் அவதரித் துபூஜை

செய்வதற் குரியதாகி

பரிமளிக் கும்வடிவம் எதுவோஅது என்னில்

மங்களம் பொழியட்டுமே (5)

பொருள் :

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த, நீருண்ட மேகம் போல திகழும் திருமாலின் திருமார்பில் கொடி மின்னலாய் விளங்கும் தாயே! பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்

மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட

மாயன்வை குந்தன்நெஞ்சில்

மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை

மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்

மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த

கடல்குமரித் திருவின்பார்வை

புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை

என்னையும் அருளட்டுமே (6)

பொருள் :

மங்களங்கள் அனைத்தும் தங்கும் இடமாகத் திகழும் திருக்கண்கள் கொண்டவளே! உன் பார்வை திருமாலுக்கே வலிமை தரக் கூடியது. அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்களின் கடைக்கண் பார்வையின் ஒரு சிறு துளி என்மேல் பட்டு மங்களங்களை அளிக்கட்டும்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்

வேடிக்கையாய்க் கொடுக்கும்

முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும்

ஆனந்தம் தந்துநிற்கும்

நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்

நளினமாய்த் தோன்றிநிற்கும்

நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது

கணமேனும் பொழியட்டுமே (7)

பொருள் :

உன் பார்வை விளையாட்டாய் கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!

மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச்

செய்கின்ற தகுதிஇல்லா

மனிதருக் குங்கூட எந்தகரு ணைப்பார்வை

சொர்க்கத்தைத் தருகின்றதோ

அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை

மலர்மீது வீற்றிருக்கும்

அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு

தேவைகளை அருளட்டுமே (8)

பொருள் :

அசுவமேத யாகம் போன்ற மகா யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை என் மேல் பொழிந்திடுவாய் தாயே!.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக்

கூட்டியே வந்துநிற்கும்

திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட

கரியமா வண்ணமேகம்

ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக்

குஞ்சுகளாம் எங்களுக்கு

செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி

வளமெலாம் அருளட்டுமே (9)

பொருள் :

காற்றின் காரணமாக கார் மேகங்கள் வானில் திரண்டு பூமிக்கு மழையை அளிக்கின்றது. பூமி செழிப்பாகின்றது. கார் மேகம் அளிக்கும் மழை நீர் பூமியை செழிப்பாக்குவது போல, ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்குரிய லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வை என்மீது பட்டவுடன் எனது வறுமை எல்லாம் நீங்கி என் வாழ்வில் வளங்கள்பெருக நான் செல்வந்தனாவேன்.

கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்

அலைமாம கள்என்றுமாய்

நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்

பெம்மானின் மலைமகளுமாய்

உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து

முடிப்பதை விளையாட்டென

செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்

நாயகியே போற்றிபோற்றி (10)

பொருள் :

ஆக்கல், காத்தல், அழித்தல் என்று கூறப்படும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற நிலைகளில், வேதத்தின் நாயகியாம் சரஸ்வதி தேவியான வாணியாகவும், கருட வாகன ஸ்ரீ விஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியாகவும், பிறை சந்திரனை அணிந்த ஈசனொரு பாகமான ஈஸ்வரியாகவும் காட்சி அளிக்கும் ஸ்ரீ மகா லட்சுமிக்கு வணக்கங்கள்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்

வேதவடி வினளேபோற்றி

நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே

ரதிதேவி போற்றிபோற்றி

எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில்

அமரும்மலர் மகளேபோற்றி

எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ

உத்தமனின் துணையேபோற்றி (11)

kanakadhara stotram in tamil

பொருள் :

ஈடு இணையற்ற சிறந்த பேரழகு கொண்டவளும், மதுரமான குணங்களை கொண்டவளும், மகா சக்தியாக விளங்குபவளும், ஸ்ரீ மகா விஷ்ணுவின் பிரியத்திற்கு உரியவளும், நல்ல கர்ம வினைப் பயனுக்கு பலன்களை அள்ளி வழங்குபவளும் கருணைக் கடலாக விளங்கும் ஸ்ரீ மகா லட்சுமி தேவியின் அருளை வேண்டுகின்றேன்.

செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட

திருமகளே போற்றிபோற்றி

மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய

மாமகளே போற்றிபோற்றி

சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன்

பிறந்தவளே போற்றிபோற்றி

நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே

நிலமகளே போற்றிபோற்றி (12)

பொருள் :

பாக்கியம் நல்கும் திருமுகம் கொண்டவளே! பாற்கடலில் உதித்தவளே! மங்களங்களை சேர்க்கும் சந்திரனை உடன் பிறப்பாய் பெற்றவளே! பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே உன் பாதம் சரணம் எனப் பணிந்தேன்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும்

செந்திருவே போற்றிபோற்றி

தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற

நாயகியே போற்றிபோற்றி

தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும்

செல்வமே போற்றிபோற்றி

சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின்

இல்லறமே போற்றிபோற்றி (13)

பொருள் :

தங்கத் தாமரை ஆசனத்தில் அமர்ந்தவளே ! தரணிக்கே தாயாகத் திகழ்பவளே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு கருணை வெள்ளத்தைப் பொழிபவளே! பெருமை மிக்க சாரங்கபாணியின் மனையாளே சரணம்.

ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே

தேவியே போற்றிபோற்றி

திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே

திருமகளே போற்றிபோற்றி

கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே

லக்ஷ்மியே போற்றிபோற்றி

காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா

மோதரனின் துணையேபோற்றி (14)

பொருள் :

பிருகு முனியின் திருமகளே சரணம்! ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறைபவளே சரணம்! தங்கத் தாமரை ஆசனத்தில் உறைபவளே சரணம்! தாமோதரனின் மனம் கவர்ந்தவளே சரணம் !

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும்

கொண்டவளே போற்றிபோற்றி

உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல

நாயகியே போற்றிபோற்றி

அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும்

அலைமகளே போற்றிபோற்றி

நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின்

நாயகியே போற்றிபோற்றி (15)

பொருள் :

ஜோதி வடிவாகத் திகழ்பவளே! தாமரை போன்ற கண்கள் உடையவளே! சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்

பெற்றிடச் செய்யும்தாயே

பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்

தருகின்ற கமலநயனீ

அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்

அஞ்ஞானம் நீக்குபவளே

செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே

என்னையே என்றுங்காப்பாய் (16)

பொருள் :

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று

செல்வங்கள் யாவற்றையும்

முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய

கடைக்கண்ணின் கருணைநோக்கு

அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும்

திருமகளே உனதுநோக்கு

உன்னைஎன் மனதாலும் மெய்யாலும் சொல்லாலும்

துதிசெய்து புகழ்கிறேன்நான் (17)

பொருள் :

உந்தன் கடைக் கண் பார்வை வேண்டி நித்தமும் உன்னை தொழுது பூஜை புரிபவர்க்கு தங்கு தடையில்லாமல் செல்வ வளம் தருபவளே! மடை திறந்த வெள்ளமென பெருகும் வகையில் நல்வரங்களை நல்கும் முராரியின் இதயம் கவர்ந்த நாயகியே| தன்னை வழிபடும் பக்தர்கள் மீது கடைக்கண் பார்வையால் கருணையை பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக்

கையேந்தும் பதுமநிதியே

புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன்

ஒளிர்கின்ற செல்வச்சுடரே

பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே

நெஞ்சமெல் லாம்அறிந்தோய்

ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே

என்னிடம் கருணைகாட்டு (18)

பொருள் :

தாமரை மலரில் அமர்ந்தவளே! தாமரை போன்ற கரம் உடையவளே! சந்தன மாலையை அணிந்து ஜோதியாக திகழ்பவளே! சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

தேவகங் கைநதியின் தெளிவான தூயநல்

நீரினைப் பொற்குடத்தில்

திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத்

திகழ்கின்ற தெய்வஅழகே

தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம்

யாவிற்குமே அன்னையே

தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே

காலைஉனைத் துதிசெய்கிறேன் (19)

பொருள் :

யானைகள் தங்கக் குடத்தில் உய்ய நீராட்டும் உடலை உடைய தெய்வத் தாயே! திருமாலின் திருமார்பில் திகழ்பவளே! பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்தற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் செல்வியே!உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின்

ஆனந்த காதலிநீ

ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில்

முதல்வனாய் நிற்பவன்நான்

அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக் கண்களின்

பார்வைக்கு ஏங்கிநிற்கும்

அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும்

என்னைநீ காணவேண்டும் (20)

பொருள் :

தாமரை மலரில் இருப்பவளே! கமலக் கண்ணனாம் ஸ்ரீ விஷ்ணுவின் காதலியே! கருணை வெள்ளமே! உன் கடைக் கண் பார்வை வேண்டி உன்னை துதிக்கும் இந்த வறியவனின் பிழை பொறுத்து தரித்திரத்தை நீக்க வழியைக் காட்டியருள வேண்டும்.

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே

ஐசுவர்யம் தந்தருள்கவே

மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்

மூவுலகி னிற்குந்தாயாம்

மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்

நிதம்புகழும் மனிதர்எவரும்

சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்

செல்வமெல் லாம்பெறுகிறார்

ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர

பாக்கியம் பலபெறுகிறார் (21)

பொருள் :

மறைகள் மூன்றின் வடிவமாகவும், மூவுலகம் தொழும் தேவியாகவும் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியே உன்னை மேற் கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால் துதித்துப் போற்றுவோருக்கு நிறை செல்வம், கீர்த்தி, ஆரோக்கியம், நிறை ஆயுள், புத்தி, மற்றும் வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அளித்து பூரண நலமும் அளிப்பாய் தாயே.

கனகதாரா ஸ்தோத்திரத்தால் விளையும் நன்மைகள் :

ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று "பிட்சா பவந்தேஹி" என்று கூறியபடி பிச்சையெடுத்தார் சங்கரன்.

ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.

பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள் புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது. அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.

சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில் அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.

சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் கண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார். அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.

செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார். இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.

நெல்லி வற்றலைப் பிச்சையிட்ட அந்தப் பெண்மணியிடம் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார். "இந்தப் பாடலை பாடி திருமகளுக்கு ஆரத்தி செய். உன் வறுமை எல்லாம் தீரும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அந்தப் பெண்மணி தன் கணவன் வந்ததும் நடந்தவற்றைக் கூறினாள். அவளும் அவள் கணவனும் சேர்ந்து சங்கரன் கற்றுத் தந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி திருமகளை வழிபட்டனர். வறுமை குடியிருந்த அவர்களின் வீட்டில் தங்க மழை பொழிந்தது. அவர்கள் வறுமை தீர்ந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.