/* */

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது

HIGHLIGHTS

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு
X

தாமிரபரணியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் நெல்லை டவுன், மேலப்பாளையம் இடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தாம்போதி பாலத்தின் இரு கரைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி இரண்டு அணிகளுக்கும் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வரை நீர்வரத்து வந்த நிலையில் இரண்டு அணைகளில் இருந்து 20,000 கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டது.

இதேபோல தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கடனாநிதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5700 கனஅடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை முதல் அணைப்பகுதியில் மழையின் அளவு குறைய தொடங்கிய சூழலில், நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு காலை நிலவரப்படி 10 ஆயிரத்து 92 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரு அணைகளில் இருந்தும் 8500 கனஅடி நீரும், கடனாநதி அணையிலிருந்து ஆயிரத்தி 700 கனஅடி நீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது..

அதிகபட்சமாக மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 91 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீரின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நெல்லை டவுன், மேலப்பாளையம் இடையே தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் தாம்போதி பாலத்தில் இரு கரைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரையகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On: 29 Nov 2021 6:03 AM GMT

Related News