/* */

அரசு ஊழியர்களுக்கே கடுக்காய்... திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசு ஊழியர்களுக்கே கடுக்காய் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசினார்.

HIGHLIGHTS

அரசு ஊழியர்களுக்கே கடுக்காய்... திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
X

திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரத்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருச்சி மாநகராட்சி சிறப்பு வாய்ந்த மாநகராட்சி. அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் பேசிய மைக்கை தூக்கி எறிந்தார்கள். அப்போது சட்டமன்றத்தில் முதல்வராகத்தான் நுழைவேன் என எம்.ஜி.ஆர் சபதம் செய்தார். அதனை சாதித்துக் காட்டினார்.

அதேபோல முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் பல அவமானங்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்தில் வந்தால் முதல்வராக தான் வருவேன் என சூளுரைத்து சபதத்தை நிறைவேற்றினார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து தான் முதல்வராக பதவி ஏற்றார்கள். ஸ்டாலின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். எதையும் தாங்கும் தெம்பும் திராணியும் அ.தி.மு.க.விற்கு உள்ளது.


முதல்வருக்கு எல்லாம் முதல்வர் என கூறிக்கொள்ளும் ஸ்டாலின் ஏன் கட்சிகளை கூட்டணி வைத்துக் கொள்கிறார்? தனித்து நிற்கவேண்டியது தானே?

கொட நாட்டில் கொலை, கொள்ளை நடந்தது. அதனை கண்டுபிடித்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு ஜாமீன் பெற்றது தி.மு.க. அ.தி.மு.க.வை குற்றம் சாட்ட தி.மு.க.விற்கு அருகதை இல்லை.

சட்டரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனையை அ.தி.மு..க சட்டரீதியாகவே சந்திக்கும். குற்றவாளிகளுக்காக எந்த நிலையிலும், எந்த காலத்திலும் அ.தி.மு.க. ஒருபோதும் பரிந்து பேசாது.

தமிழக காவல்துறை ஸ்டாலின் அரசுக்கு ஏவல் துறையாக செயல்படுகிறது. ஆட்சி மாறும், காட்சிகளும் மாறும். எனவே காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். கோவை, சேலம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் உதவியுடன் தி.மு.க. அரசு வழக்கு போடுகிறார்கள்.

இது கண்டிக்கத்தக்கது. எனவே காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். காவலர்கள் தவறிழைக்க கூடாது.

தவறு செய்யாத அ.தி.மு.க.வினரை கூட தவறு செய்தவர்களாக சித்தரித்து காவல்துறை வழக்குப் போடுகிறது.

எதிர்காலத்தில் இதற்கு காவல்துறை பதில் சொல்லியே ஆகவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த தி.மு.க. படித்தவர்களையே ஏமாற்றி விட்டது. 2021 ஜுலை முதல் 2021 டிசம்பர் வரை அகவிலைப்படி வழங்கப்படமாட்டாது என நிதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.எனவே படித்த அரசு ஊழியர்களுக்கே கடுக்காய் கொடுத்து விட்டது தி.மு.க. அரசு.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியது அ.தி.மு.க. அரசுதான்.


கடந்த பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதனை ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது.இதனையடுத்து 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தாலும் தமிழக அரசு குறைக்கவில்லை.

தேர்தல் நேரத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது நகை கடன் தள்ளுபடி இல்லை என்று கூறுகிறார்கள். நீட் என்ற நச்சு விதை தி.மு..க ஆட்சி காலத்தில் தான் ஊன்றப்பட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்ஜோதி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2022 2:47 PM GMT

Related News