/* */

பிரியாணி மணக்கும் தேனி தெருக்கள் : மண்மணத்தை துாக்கி அடிக்கும் மசாலா மணம்

தேனி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிகளவு சாலையோர பிரியாணி கடைகள் உருவாகி உள்ளன.

HIGHLIGHTS

பிரியாணி மணக்கும் தேனி தெருக்கள் :  மண்மணத்தை துாக்கி அடிக்கும் மசாலா மணம்
X

சின்னமனுார் பிரியாணி சந்தையில் உள்ள பிரியாணிக்கடை.

கொரோனா கால பேரிடரால் வேலையிழந்த பலரும் தங்கள் முதல் சாய்ஸ் ஆக பிரியாணிக்கடைகளை தேர்வு செய்துள்ளனர். இதனால் தேனி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள், பல பேரூராட்சிகளில் பிரியாணி வாசம் 'கமகம'க்கிறது.

தேனி மாவட்டம், 95 சதவீதம் விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், பல ஆயிரம் பேர் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா கால பேரிடரில் இவர்களில் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இப்படி வேலை இழந்தவர்கள் சுய தொழிலுக்கு மாறி வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தேனி நகரில் 100க்கும் அதிகமான புதிய சாலையோர பிரியாணி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சாய்ஸ் ஆக அவர்கள் தேர்வு செய்த சுயதொழில் ஜவுளிக்கடை. தேனியில் மிகப்பெரும் கார்ப்பரேட் ஜவுளிக்கடைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், சிறிய குட்டிக்கடைகள் ஏராளமாக பெருகி விட்டன.

மூன்றாவது அதிகம் பேர் தேர்வு செய்தது காய்கறிகள் விற்பனை. அதுவும் நடமாடும் காய்கறிகள் விற்பனை. சிறிய சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தெருத்தெருவாக விற்கின்றனர். இதனால் மக்களுக்கு வீட்டின் வாசலிலேயே காய்கறிகள் கிடைக்கிறது.பிரியாணி கடைகள் அதிகம் திறக்கப்பட்டதன் விளைவு, தேனியில் பிரியாணி கடைகள் இல்லாத முக்கிய தெருக்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலை தான். வழக்கமாக மழை சாரலாக பெய்யும் முதல் ஐந்து நிமிடங்கள் மண் வாசனை ஆளையே மயக்கும். கிராமங்களில் சில பகுதிகளில் வாசல் தெளித்தாலே மண் வாசனை வந்து விடும்.

தேனி போன்ற பெரிய நகராட்சிகளில், அமைதியான, ஒதுக்குப்புறமான குடியிருப்புகளில் இன்னமும் மண்வாசனை உணர முடியும். ஆனால் நகருக்குள் மசாலா வாசனை ஆளை துாக்கி அடிக்கிறது. காலை 11 மணிக்கு மெல்ல உலா வரத்தொடங்கும் மசாலா வாசனை இரவு 11 மணி வரை சக்கைபோடு போடுகிறது. தேனியை அடுத்த சின்னமனுாரில் ஒருபடி மேலே போய் 'பிரியாணி சந்தையே உருவாக்கி விட்டனர்'. சின்னமனுார் தேரடியை ஒட்டிய மெயின் தெருவில் ஏராளமான இறைச்சிக்கடைகளும், பிரியாணி கடைகளும் முளைத்து விட்டன. காலை 5 மணி முதல் 10 மணி வரை இறைச்சி விற்பனை நடக்கும். அதன் பின்னர் இரவு 10 மணி வரை இந்த இறைச்சி கடைகள் அனைத்தும் பிரியாணி கடைகளாக மாறி விடுகின்றன. இரண்டு லெக் பீஸ்களுடன், ஒரு பிளேட் (400 கிராம்) பிரியாணி 100 ரூபாய்க்கு வழங்குவதால், எத்தனை பேரல் பிரியாணி போட்டாலும், விற்பனை சக்கைபோடு, போடுகிறது. அதுவும் பக்கெட் பிரியாணி ஐநுாறு ரூபாய் தான்.

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஏழு பேர் தாராளமாக சாப்பிட முடியும். பிரியாணிக்கு இணையாக லெக்பீஸ்களும் இருக்கும். அதேபோல் மட்டன், சிக்கன், மீன் வகைகளில் என்னென்ன சமைக்க முடியுமோ அத்தனை வகைகளும் சமைத்து அடுக்கி விடுகின்றனர். (இவர்களின் உழைப்பை கண்டால் தலைசுற்றுகிறது. அவ்வளவு கடும் பணிகளை அசால்டாக களைப்பின்றி செய்கின்றனர். சிரித்த முகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பறிமாறுகின்றனர்.).

தேனி மாவட்ட மக்கள் தினமும் பிரியாணி தின்பார்களா? என்று கேட்காதீர்கள். பக்கத்திலேயே இறைச்சி பிரியர்கள் அதிகம் வாழும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் இருக்கிறது. இடுக்கி மாவட்டத்தினர் முழுமையாக தேனி மாவட்டத்தை சார்ந்தே வாழ்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வரை வாழும் மக்களின் பெரும்பாலானோர் பிரியாணி வாங்க தேனிக்கே வருகின்றனர். காரணம் மதுரையில் ஒரு பிளேட் பிரியாணி வாங்கும் செலவில், தேனியில் இரண்டரை பிளேட் பிரியாணி, அதிக லெக்பீஸ்களுடன் வாங்கி விடலாம். எனவே பிரியாணி மார்க்கெட் 'ஸ்டேண்டர்ட்' ஆகவே உள்ளது.

சுவைக்காக ஏதும் சிறப்பான பொருட்கள் சேர்க்கிறார்களா? கை பக்குவமா? சமையல் பக்குவமா? என்பது தேவரகசியம். ஆனால் பிரியாணி சுவையாக இருந்தாலும், வயிற்றுக்கு தொல்லை செய்வதில்லை என வாடிக்கையாளர்களும் புகழ்கின்றனர். தேனி மாவட்டத்தில் தற்போதைய அசுர வளர்ச்சி பெற்ற தொழில் என்றால் அது பிரியாணிக்கடைகள், நான்-வெஜ் சமைத்து விற்பனை செய்யும் மசாலா கடைகள் தான் என வியாபாரிகள் சங்கத்தினரே பெருமிதத்துடன் கூறுகின்றனர். அந்த அளவு இந்த தொழில் களைகட்டி வருகிறது.

Updated On: 6 Sep 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!