/* */

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார்

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார்
X

தஞ்சையில் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது அபராதம் விதித்த போலீசார்.

அய்யம்பேட்டையில் இருந்து தஞ்சைக்கு கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கு, போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து விடுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 10-ந் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வெளியூர்களுக்கு செல்வதற்கு இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு இப்பதிவு தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு ரூ200 அபராதத்தை போலீசார் விதித்தனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழ வீதியைச் சேர்ந்தவர் சங்கர். வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பினார். இவருடைய மனைவி சத்யா (வயது 35). கர்ப்பிணியான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரிடம் காண்பித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பரிசோதனைக்கு வருமாறு டாக்டர் கூறியதன் அடிப்படையில் சத்யா தனது கணவர் சங்கருடன் ஆட்டோவில் தஞ்சைக்கு வந்தார். தஞ்சை கோடியம்மன் கோயில் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது சங்கர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி தான் வைத்திருந்த ஆவணங்களை காண்பித்தார். இதையடுத்து ஆட்டோவை செல்லுமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஆட்டோ தஞ்சை கரந்தைக்கு அருகிலுள்ள போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர்.

அப்போது ஆட்டோ எங்கு செல்கிறது என கேட்டபோது சத்யா தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி உள்ளார். சத்யாவின் கணவர் சங்கர் தான் வைத்திருந்த ஆவணங்களையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதனை கண்டுகொள்ளாத போலீசார் இ-பதிவு இல்லாமல் எப்படி வருகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு சங்கர் நாங்கள் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக செல்கிறோம். மருத்துவமனைக்குச் செல்வதற்கு இப்போதைக்கு இ பதிவு தேவையில்லை என அரசு கூறியுள்ளது எனக் கேட்டுள்ளார். அதை கண்டு கொள்ளாத போலீசார் முககவசம் சரியாக அணியவில்லை என கூறி ரூ 200 அபராதம் விதித்துள்ளனர்.

அபராதம் கட்டவில்லை என்றால் ஆட்டோவை பறிமுதல் செய்து விடுவதாகவும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். இதையடுத்து சங்கர் 200 அபராதத்தை செலுத்தியுள்ளார். அதற்கு ரசீது வழங்கியுள்ளனர். பின்னர் ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கர் கூறுகையில் "கடந்த வாரம் பரிசோதனைக்கு வரும்போது இ பதிவு செய்து எனது மனைவியை அழைத்து வந்தேன். ஆனால் தற்போது இ பதிவு தேவையில்லை என அரசு அறிவித்துள்ளதால் எனது மனைவியை ஆட்டோவில் அழைத்து வந்தபோது போலீசார் முதலில் பதிவை காட்டும்படி கேட்டனர். பின்னர் நான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியதையடுத்து ஆட்டோ டிரைவர் முக கவசம் அணியவில்லை என கூறி அபராதம் விதித்தனர். நாங்கள் மூன்று பேருமே முககவசம் அணிந்து இருந்தோம். நாங்கள் சொல்வதை போலீசார் காது கொடுத்து கேட்கவில்லை" என்றார்.

ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் கூறுகையில், "அரசு அறிவித்துள்ள ஊரடங்கை நாங்கள் மதிக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் போதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் சென்று வருகிறோம். கர்ப்பிணி பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும் போது போலீசார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதனால் நாங்கள் இனிமேல் எவ்வாறு ஆட்டோக்களை ஓட்டிச் செல்வது. போலீசாரின் இந்த நடவடிக்கை பார்த்தால் இனிமேல் யாராவது மருத்துவமனைக்கு கூப்பிட்டால் நாங்கள் எப்படி செல்வது."என்றார்.

Updated On: 28 May 2021 3:15 AM GMT

Related News