/* */

ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கையுள்ள சிறப்பு முகாம்... சேலத்தில் செயல்பாட்டுக்கு வருமா?

சேலத்தில், ஆக்சிஜன் வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாமை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கையுள்ள சிறப்பு முகாம்... சேலத்தில் செயல்பாட்டுக்கு வருமா?
X

சேலம் மாவட்ட அளவில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 38 பேர் வரை உயிரிழந்தனர்.

சராசரியாக நாளொன்றுக்கு 20 பேர் வீதம் தொற்று பாதித்து உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் எப்போதும் நிரம்பியே காணப்படுகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை சமாளிக்க, சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு முகாமினை, தமிழக அரசு அமைத்து வருகிறது. ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கட்டமைப்புகளும் நிறுவப்பட்டு வருகிறது.

ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 20ஆம் தேதி நேரில் துவக்கி வைத்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் முகாமிற்கான ஏற்பாடுகள், இதுவரை நிறைவடையவில்லை. மேற்கூரை அமைத்து படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கான காற்றோட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்திற்கான தனி டிரான்ஸ்பார்மர் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஐனுக்கான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுகாதார வசதிக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டமைப்பு பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவது போன்ற தோற்றமளித்தாலும் இந்த முகாமினை அமைப்பதற்கான காலம் நீட்டித்துக் கொண்டே வருகிறது.

ஆக்சிஜனுடன் கூடிய சிறப்பு முகாம் விரைவில் செயல்படத் தொடங்கினால் சேலம் மாவட்ட அளவில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இம்முகாம் மூலமாக தீவிர சிகிச்சை அளிக்க முடியும், மருத்துமனைகளில் நிலவிவரும் அழுத்தமும் குறையத்தொடங்கும்.

எனவே சேலத்தில் அமைக்கப்படும் சிறப்பு முகாமிற்க்கான பணிகளை, கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 27 May 2021 12:17 PM GMT

Related News