/* */

சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு

குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் பேசிய நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில். உடன் ஆணையர் நாகராஜன், துணைத்தலைவர் எம். லியாகத்அலி

புதுக்கோட்டை நகரில் சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் நீத்தார் நினைவு சடங்குகள் அதிகம் நடைபெறுவதால், அந்தப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக ரூ. 10 லட்சத்தில் கழிப்பறை மற்றும் குளியலறை கட்ட புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புதுக்கோட்டை நகர் மன்றத்தின் சாதாரணக் கூட்டம் ஆணையர் நாகராஜன், துணைத்தல்வர் எம். லியாகத் அலி ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி பேசியதாவது: கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ரூ. 9 கோடியில் தயாராகி வரும் பூங்காவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பெயர் சூட்டப்படும் என்றார் திலகவதி.

27ஆவது வார்டு உறுப்பினர் சா. மூர்த்தி பேசியது:புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை முன்பெல்லாம் காலை மாலை இரு வேளையும் சுத்தப்படுத்தி வந்தனர். இப்போது அது செய்யப்படாததால், பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. பொதுமக்கள் முகம் சுழித்து, மூக்கைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, காலை மாலை இரு வேளையும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

நகரின் பல இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் இடிக்கப்படும் பழைய கட்டுமானக் கழிவுகளை வீதிகளிலுள்ள சந்துகளில் கொட்டிவிடுகின்றனர். இதனால், கழிவுநீர் பாதைகளும், மழைநீர்ப் பாதைகளும் அடைபடு கின்றன. இதுகுறித்து கட்டுமானப் பணியின் போது பெறப்படும் அனுமதியின் போதே நகராட்சி அலுவலர்கள் உரிய அறிவுரைகளை வழங்குவதுடன், அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார் மூர்த்தி.

5 வது வார்டில் நகராட்சி பள்ளி ரூ 10 லட்சத்தில் சீரமைப்பு

வார்டு எண் 5 -இல் உள்ள நகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்காக மேற்கூரை அமைக்கப் பட்டும் பணிகள் முழுமையாக முடியாத காரணத்தால் வகுப்புகள் நடைபெறுவது பாதிக்கப்படுவதாக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் தலைமை ஆசிரியர் விடுத்துள்ள கோரிக்கையை அடுத்து, எஞ்சியுள்ள பணிகளான பூச்சு, மின் இணைப்புப் பணிகள், டைல்ஸ் தளம் அமைத்தல், கதவு மற்றும் ஜன்னல் வண்ணப் பூச்சுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைப்போல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமுதா அருணாசலம்(13-வது வார்டு), ராஜேஸ்வரி(19 வது வார்டு) ஆகியோர் கருப்பு உடையணிந்து வந்திருந்தனர். ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த உடையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 March 2023 3:45 AM GMT

Related News