/* */

நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை

25 டன் வரை அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 4 முதல் 5 டன் வரையே அறுவடை செய்வதாகவும் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை
X

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப் படியாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மலைக் காய்கறிகள் நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திலிருந்து தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் டன் கணக்கில் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து மழையின் தாக்கம் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பெய்த கனமழையால் அதிக அளவிலான கேரட் பயிர்கள் விளை நிலங்களிலேயே அழுக தொடங்கியுள்ளன. இதனால் நான்கு மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்யப்பட வேண்டிய கேரட் பயிர்கள் 80 நாட்களிலேயே அறுவடை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி கூறுகையில், ஒவ்வொரு அறுவடையின் போது 20 முதல் 25 டன் வரை கேரட் பயிரிடப்பட்டு அறுவடை செய்வதாகவும் தற்பொழுது காலநிலை மாற்றம் தொடர்ந்து பெய்த மழையின் காரணத்தினால் 5 முதல் 6 டன் வரை மட்டுமே கேரட் பயிர்கள் அறுவடை செய்ய முடிகிறது.

இதனால் ஆட்களுக்கு கூலித் தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அறுவடை செய்யும் கேரட் வகைகள் தூய்மைப்படுத்த கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு கொண்டு செல்லும் பொழுது அதிலும் அதிக அளவிலான கேரட் வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு பருவ மழையும் போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை இந்த முறை பெய்த கனமழை காரணத்தினால் கேரட் பயிரிடப்பட்டு இருக்கும் தங்களின் நெருக்கடியான சூழ்நிலையை கண்டு மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கும் மலை காய்கறிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலேயே அழுகும் நிலையால் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Updated On: 15 Dec 2021 9:45 AM GMT

Related News