/* */

கலெக்டர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கலெக்டர் அலுவலகம் எதிரில் விவசாயிகள்  காத்திருப்பு போராட்டம்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாயை கொண்டு செல்வதைக் கண்டித்து கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் மற்றும் பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க்குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கெயில் நிறுவனம் கேரளா மாநிலம், கொச்சியிலிருந்து தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் திட்டத்தை விவசாயிகளின் நிலங்கள் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் கடும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகத்தான் திட்டம் என்ற கோட்பாட்டை அறிவித்து அதன் அடிப்படையில், கெயில் எரிவாயுக்குழாய் திட்டம் சாலையோரம் மட்டுமே நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் தற்போது கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி திட்டப் பணிகளை செய்து வருகிறது. தற்போது இது சம்பந்தமாக தமிழக அரசு சட்டசபையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் கேரளா மாநிலத்திலும், கர்நாடகா மாநிலத்திலும் சாலையோரம் மட்டுமே அமைக்கப்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, கெயில் நிறுவனம் சாலையோரம் எரிவாயு குழாய் அமைப்பதை விவசாயிகளான நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்.

எனவே தாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் கெயில் எரிவாயுக் குழாய் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தற்போது பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு புதிதாக நான்குவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் எடுப்புப் பணிகள் நடந்து வருகிறது. எனவே இந்த சாலையின் ஓரத்தில் கெயில் எரிவாயுக் குழாய் மற்றும் பாரத் பெட்ரோலிய எண்ணெய் குழாய் திட்டத்தையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 April 2021 4:45 AM GMT

Related News