/* */

காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 கால்நடைகள்: மாநகராட்சி பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கால்நடைகளால் வாகன விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரின் காரணமாக மாநகராட்சி கடந்த வாரம் எச்சரித்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 கால்நடைகள்: மாநகராட்சி பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

காஞ்சிபுரம் நகரில் வாகன விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் குழு பறிமுதல் செய்து கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுலா நகரம் என இருந்து வரும் நிலையில் , பல்லாயிரக்கணக்கானோர் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

தொழிற்சாலையில் இரவு பணி பணிபுரிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்புகளை இழக்கும் அபாயங்களை ஏற்படுத்துவதாக தொடர் புகார் எழுந்தது.

மேலும் தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டதால் , கால்நடைகள் வளர்ப்போர்கள் மாட்டு தீவனம் உள்ளிட்ட விலை உயர்வால் மேய்ச்சலுக்கு மாடுகளை கட்டவிழ்த்து விடும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையிலான சாலை பாதுகாப்பு வார கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் , சாலையில் சுற்றித் திரிய விடும் கால்நடை வளர்ப்போர்க்கு எச்சரிக்கை விடுத்தும் , இதை மீறும் பட்சத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி கால்நடைகளை பறிமுதல் செய்து இது தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தது.

இதனை பின்பற்ற கால்நடை உரிமையாளர் தயங்கி நிலையில் , இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் தனது ஊழியர்களுடன் இணைந்து ரங்கசாமி குளம் , விளக்கடி கோயில் தெரு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த ஆறு கால்நடைகளை பறிமுதல் செய்தனர்.

கால்நடை பறிமுதல் செய்யப்பட்டது அறிந்து அங்கு வந்த கால்நடை உரிமையாளருக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே சிறிது கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் கால்நடைகளை மாநகராட்சி வாகனம் மற்றும் தனியார் வாகனம் மூலம் ஏற்றி மாநகராட்சி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

கால்நடை விடுவிப்பு குறித்து தங்களால் ஏதும் செய்ய இயலாது எனவும் , உரிய அபராதம் செலுத்தி இனி தவறை செய்ய மாட்டோம் என உறுதி கூறிய பின் விடுவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது முதல் கட்ட முயற்சி என்றாலும் இதனை மாநகராட்சி நாள் தோறும் தங்கள் பணியில் இதனையும் ஒரு பகுதியாக கருதி செய்தால் பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போடும் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்பது உறுதி எனவும் , விபத்துக்கள் இல்லாத காஞ்சிபுரம் நகரம் என உருவாக அதிக அளவு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Updated On: 14 Oct 2022 7:00 AM GMT

Related News