/* */

கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி சம்பவம் எதிரொலி கலெக்டர்,எஸ்பி அதிரடி இடமாற்றம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவத்தையடுத்து நடந்த வன்முறை சம்பவம் காரணமாக கலெக்டர் ,எஸ்பி உட்பட உயர் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி சம்பவம் எதிரொலி   கலெக்டர்,எஸ்பி  அதிரடி இடமாற்றம்
X

இடமாற்றம் (மாதிரி படம்.)

கள்ளக்குறிச்சி, அருகேயுள்ள கனியாமூர் கிராமம். இங்கு இயங்கி வந்த தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த13 ந்தேதி ஹாஸ்டல் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் , பொதுமக்கள் ஆகியோர் மரணத்துக்கு நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் நுாற்றுக்கணக்கானோர் திரணடதால் போலீசாரால் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தினை துவக்கி கடைசியில் அது வன்முறையில் முடிந்தது. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அங்குள்ள பஸ்களுக்கு தீ வைத்ததோடு பொருட்களையும் அடித்து நொறுக்கினர். .

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிபி மற்றும் உயரதிகாரிகளை நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு நேரில் விரைந்தார். உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் துணையோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவினை கலெக்டர் ஸ்ரீதர் அமல்படுத்த உத்தரவிட்டார். மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை அவர்கள் கூறும் டாக்டரை வைத்து செய்யவேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் ஐகோர்ட்டில் மனு அளித்ததோடு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனமனு அளித்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் மாணவியின் மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்குழுவினை நீதிபதி அறிவித்தார். மேலும் மறு பிரேத பரிசோதனையினை முழுவதும் வீடியோ எடுக்க உத்தரவிட்டார்.பிரேத பரிசோதனைக்கு பின் வேறு எந்த பிரச்னையினையும் செய்யாமல் உடலை பெற்றுக்கொண்டு அமைதியான முறையில் இறுதி சடங்கு நடத்தவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இன்று சிபிசிஐடி சார்பில் தனியார் பள்ளியில் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கலெக்டர், எஸ்பி டிரான்ஸ்பர்

இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக ஷ்ரவன்குமார் ஜெடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எஸ்பியாக இருந்த செல்வகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 20 July 2022 5:27 AM GMT

Related News