/* */

கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அகற்றம்

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் விபத்துகள் ஏற்படுத்தும் வகையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டிருந்த 69 விளம்பர பலகைகள் அகற்றம்

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அகற்றம்
X

கோவை மாநகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம் 

வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், விளம்பர பலகைகள் வைக்க, உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகமும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் விபத்துகள் ஏற்படுத்தும் வகையில், விதிமுறையை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி ஆட்சியர் கிராந்திகுமாரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நகர் பகுதியில் விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள, விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு, மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மண்டலம் வாரியாக அதிகாரிகள் அதிரடியாக விளம்பர பலகைகளை அகற்றினர். தற்போது கோவையில் அனுமதியின்றி, விதிமுறையை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை தொடரவும், இரும்பு கம்பிகளை அறுத்தெடுக்கவும், மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மண்டலத்தில் திருச்சி ரோடு, காமராஜ் ரோடு, ஹோப் காலேஜ் சந்திப்பு மற்றும் அவிநாசி ரோடு பகுதிகளில் கடந்த இரு நாட்களில், 33 இடங்களில் விளம்பர பலகைகளை அகற்றினர். மழை நின்றதும் இரும்பு கம்பிகளை அகற்ற, நகரமைப்பு பிரிவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

மேற்கு மண்டலத்தில் வடவள்ளி, சங்கனுார் பள்ளம், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு சந்திப்பு உள்ளிட்ட 13 இடங்களில் நேற்று அகற்றினர். இரு இடங்களில் மட்டும் இரும்பு கம்பிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இந்த பணி தொடரவுள்ளது.

வடக்கு மண்டலத்தில் எந்தெந்த இடங்களில் விளம்பர பலகைகள் இருக்கின்றன என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டில், இரு இடங்களில் கம்பிகளை முழுமையாக அறுத்தெடுத்து அகற்றியிருக்கின்றனர். இதே போல், அனைத்து இடங்களிலும் அகற்ற முடிவு செய்திருக்கின்றனர்.

மத்திய மண்டலத்தில் புலியகுளம், சலீவன் வீதி, என்.எச்.ரோடு, ராஜ வீதி, டெக்ஸ்டூல் பாலம், வடகோவை, நுாறடி ரோடு உட்பட, 19 இடங்களில் விளம்பர பலகைகளை அகற்றினர். .

தெற்கு மண்டலத்தில், பேரூர் ரோட்டில் தெலுங்குபாளையம் பிரிவு, பொள்ளாச்சி ரோட்டில் சிட்ரோ எதிர்புறம் இருந்த, விளம்பர பலகைகளை அகற்றினர்.

கடந்த இரு நாட்களில் மட்டும், மாநகராட்சி பகுதிகளில், 69 இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. விடுபட்ட இடங்களில் தொடர்ச்சியாக எடுக்கவும், மீண்டும் விளம்பர பலகைகளை வைக்காமல் இருக்க, இரும்பு கம்பிகளை அறுத்தெடுக்கவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Updated On: 4 May 2023 5:36 AM GMT

Related News