/* */

கோவை மத்திய சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

கோவை மத்திய சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை
X

கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏ., வானதி சீனிவாசன்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பல இடங்களில் அவரது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரனார் கோவை மத்திய சிறையில் இருக்கும் போது, அவர் இழுத்த செக்கிற்கும் அவரது திருவுருவ படத்திற்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேருந்தானது கோவையில் உள்ள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இனி வரும் நாட்களில் செல்ல இருக்கிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் கூறியதன் அடிப்படையில் வ.உ.சிதம்பரனாரின் அருமைகளை போற்றுகின்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

கோவையில் அவருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது என்றும், பல்வேறு இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் கண்காட்சி பேருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நஞ்சப்பா சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் மற்றும் கோவையில் ஏதாவது ஒரு மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிதம்பரனார் பேரவை அமைப்பினர் வைத்துள்ளதாகவும், அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவே சனி ஞாயிறுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறைத்துறை டிஐஜி., சண்முகசுந்தரம், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 6:30 AM GMT

Related News