/* */

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி: ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

HIGHLIGHTS

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி: ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்
X

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது என்று கூறினார்கள்.

Updated On: 22 Jan 2024 9:09 AM GMT

Related News